பிரபாகரனை மறந்து விட்டார்கள்; திங்கட்கிழமை வரைமட்டுமே அவகாசம்!
தமது ஓய்வூதியம் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்பதை முன்னிட்டு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் 6 தினங்களாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் அவர்களுடைய உரிமையை பெற்றுக்கொடுக்க ஆரதளிப்பதனை விடவும் அரசியல் இலாபங்களுக்காக மக்களை திசை திருப்பும் காய் நகர்த்தல்களும் மறைமுகமாக இடம் பெற்று வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கலந்து கொண்ட பெங்கேகமுவ நாலக ஹிமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த ஆட்சி முறைகேடாக நடந்து கொள்கின்றது, தற்போதும் இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியங்கள் கொடுப்பனவை எதிர்த்துக் கொண்டிருப்பதும் புலம் பெயர் தமிழர்களே எனவே அரசு முறையாக இராணுவத்தினரின் கோரிக்கையினை நிறைவேற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் எதிர்கரும் திங்கட்கிழமை மாத்திரமே உங்களுக்கு அவகாசம் அதற்குள் தீர்மானம் ஒன்றினை எடுத்து விடுங்கள். பொலிஸார் எத்தகைய முயற்சியினை எடுத்தாலும் எம்மை தடுக்க முடியாது என ஆக்ரோஷமான வகையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நேற்றைய தினமும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிக்கு ஒருவர்,
நாட்டில் பிரபாகரன் தீவிரவாதத்தை வளர்த்ததை மக்கள் மறந்து விட்டார்கள், நாட்டில் கொடிய யுத்தம் நிகழ்ந்தமையையும் மக்கள் மறந்து விட்டார்கள்.
முறையாக ஆட்சி நடந்தால் இப்போது இராணுவ வீரர்கள் வீதியில் நிற்க வேண்டியது இல்லை. இன்று தீவிரவாதிகள் நல்லவர்களாகி விட்டார்கள் அதே போன்று தீவிரவாதத்தை ஒழித்தவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு விட்டார்கள்.
அதனால் இராணுவ வீரர்களுடைய முறையான கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் ஆட்சியாளர்களே உங்களது ஆட்டங்களுக்கு ஒருபோதும் சிங்களவர்கள் அடி பணிய மாட்டார்கள் எனவும் அவர்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகளை அரசிற்கு முன்வைத்தும் காலக்கெடுக்களை விதித்துக்கொண்டு வரும் வேளையில் ஆட்சிக்கு எதிரான மஹிந்த தரப்பும் கூட்டு எதிர்க்கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டும் வருகின்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றவர்களின் கருத்துகளானவை மக்களை தூண்டிவிடும் கருத்துகளாகவே அமைகின்றன என்பது கடந்த 6 தினங்களில் போராட்டத்திற்கு வருகைத்தந்திருந்த அரசியல் தலைமைகள் மூலமாக அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையினை அரசு எவ்விதம் கையாளப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அரசு உடனடி முடிவு எடுக்காவிடின் இதனைக் காரணம் காட்டி இராணுவம் ஆட்சிக்கு எதிராக திசைதிருப்பப்படும் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.