Breaking News

ஆவா குழுவை ஒழிப்பது பற்றி பேசவில்லை – இராணுவம் மறுப்பு



வடக்கில் ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் உத்தரவுக்காக சிறிலங்கா காத்திருப்பதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.

ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டால், அதனை இலகுவாக மேற்கொள்ள முடியும் என்றும், அரசாங்கத்தின் உத்தரவுக்காக சிறிலங்கா இராணுவம் காத்திருப்பதாகவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இந்தக் கருத்தை தாம் வெளியிடவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு தாம், இது இராணுவத்துடன் தொடர்புடைய விடயமல்ல என்றும், காவல்துறையினருடன் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று பதிலளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.