Breaking News

கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி தராவிடின் போராட்டம் தொடரும்

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் மாணவர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அரசரத்தினம் மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரஜீபன் ஆகியோரது தலைமையில் 16 பேர் கொண்ட குழு நேற்றிரவு கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது படுகொலை தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இடம்பெறும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்தில் உரையாற்றியிருந்தபோது தெரிவித்திருக்கும் நிலையிலேயே இன்றைய தினம் ஜனாதிபதியை பல்கலைக்கழகக் குழு சந்திக்கவுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் 5 விதமான கோரிக்கைகளை தமது குழுவினர் முன்வைக்கவிருப்பதாகவும், அதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த உறுதி கிடைக்காவிட்டால் பல்கலைக்கழகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரஜீபன் தெரி வித்தார்.

01. மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை ஜனாதிபதி வழங்க வேண்டும், 

02. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் குற்றவாளியை இனங்கண்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், 

03. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்தக்கூடாது, 

04. படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்காக அவர்களது பெற்றோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்டஈட்டை அரசாங்கம் விரவைில் வழங்கிவைக்க வேண்டும், 

05. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வாறான சம்பவமொன்று இனியும் இடம்பெறக்கூடாது என்ற உறுதியை ஜனாதிபதி வழங்க வேண்டும்,

ஆகிய கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைக்கவிருப்பதாக ரஜீபன் கூறினார்.

இந்தக் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சிறந்த பதிலை அளித்தால் பல்கலைக்கழக நடவடிக்கை வழமைபோன்று இடம்பெறும். மாறாக ஜனாதிபதி புறந்தள்ளினால் பல்கலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ரஜீபன் தெரிவித்தார்.