Breaking News

தமிழினிக்காக வெளியாகியுள்ள சிங்கள பாடல்! (பாடல் இணைப்பு)



விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினிக்காக சிங்கள பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழினி தனது உணர்வுகளை சொல்வது போன்ற வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு லைட் ஹவுஸ் கெலேயில் நேற்று இடம்பெற்றுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவின் பாடல் வரிகளில் உருவாகிய பாடல், இசையமைப்பாளர் மஹிந்த குமாரினால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உரேஷா ரவிஹாரியினால் பாடப்பட்டுள்ள இந்த பாடல் தர்ஷன ருவன் திஸாநாயக்க என்பவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

காஷ்யப்ப சத்யபீரிஸ் டி சில்வாவினால் பாடல் அடங்கிய இறுவட்டு, தமிழினியின் கணவரான ஜேயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்வில் மூத்த ஒளிப்பதிவாளர் தர்மசிறி பண்டாநாயக்க, புகழ்பெற்ற எழுத்தாளர் சுனில் மாதவ பிரேமதிலக்க அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் ஏற்படும் என உறுதியாக நம்பும் அனைத்து மக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது.


கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது தமிழினி கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டடிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.