83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை
டெல்லியில் இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழக, இலங்கை மீனவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
தேசிய மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எம்.இளங்கோ கூறும்போது, “பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. தமிழக மீனவர்கள் சார்பாக இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 114 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு மீனவர்களும் இந்தியா - இலங்கை இடைப்பட்ட கடற்பகுதியில் சுமுகமாக, தொடர்ச்சியாக, கடல்வளம் பாதிக்கப்படாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இருதரப்பு மீனவர்களின் கருத்து” என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கூறியதாவது:-
83 கடல் நாட்களில் நாங்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இழுவலையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இழுவலையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்கிறோம் என்றும், 3 ஆண்டுகள் எங்களுக்கு அனுமதி தேவை என்றும் கூறினோம்.
தங்கு ஊசி வலைகளை நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த முடிவுகள் இரு அரசுகள் முன்பும் வைக்கப்பட்டு 5-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு தேவதாஸ் கூறினார்.
இலங்கை மீனவர்கள் அமைப்பு சார்பில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதி மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் வேலுப்பிள்ளை, தவச்செல்வம், மன்னார் முகமது ஆலம் ஆகியோர் கூறியதாவது:-
83 கடல்பிடி நாட்கள் அல்ல, தமிழக மீனவர்கள் எங்கள் பகுதியில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழக மீனவர்கள் எங்கள் பகுதியில் அத்துமீறி மீன் பிடிக்கிறார்கள். இவர்கள் அத்துமீறலால் எங்கள் பகுதியில் மீன்வளம் மட்டுமல்ல, கடல்பாசி முதலான அனைத்து கடல் வளங்களும் சுரண்டப்பட்டுவிட்டன. தமிழக மீனவர்கள் யாரையும் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம்.
அத்துமீறி மீன்பிடிக்க வந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை திருப்பி அனுப்ப அனுமதிக்க மாட்டோம். அத்துமீறி வரும் மீனவர்கள் மீது இலங்கை அரசின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். அதேபோல, நாங்கள் இந்திய பகுதிக்கு வந்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது தான் சிறிதுசிறிதாக நிலைமை மாறி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் அத்துமீறி எங்கள் பகுதியில் கடல் வளங்களை சுரண்டுவது எங்களுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எனவே எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தமிழக மீனவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கள் குடும்பங்களை காப்பாற்ற எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களுக்கு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டால் நாங்கள் பிச்சை எடுக்கும் நிலை உருவாகும். 5-ந் தேதி அரசு மட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் எல்லை தாண்டி வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.