தமிழ் மக்கள் வெறுக்கும் நிலையை உணருங்கள்
தமிழ் அரசியல் தலைமையின் பலவீனமான போக்கு இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது.
இங்கு தமிழ் அரசியல் தலைமையின் பலவீனம் என்பது நேர்மையற்ற தன்மை -வெளிப்படைத் தன்மை யற்ற போக்கு - தமிழ் இனத்துக்கான விசுவாசமின்மை என்பவற்றால் ஏற்பட்டதாகும்.
இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் அரசியல் தலைமையின் செயற்பாடு ஒரு சிலரின் வழிப்படுத்தலில் முன்னெடுக்கப்படுவதாகும்.
தாம் செய்வதெல்லாம் சரியானது என்ற இறுமாப்பில் அரசாங்கத்துடனும் சிங்களப் பேரினவாதத்துடனும் இணங்கிப் போகின்ற நடைமுறையை தமிழ் அரசியல் தலைமை பின்பற்றுவது தொடர்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையிலும் தமிழ் அரசியல் தலைமை நடந்து கொள்ளவில்லை.
சர்வதேச விசாரணை தேவையயன்று தமிழ் மக்கள் கேட்கின்ற நேரத்தில், சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறுவதானது சர்வதேச விசாரணை நடைபெறுவதைத் தடுப்பதற்கான சதி என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இத்தகைய போக்குகளால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல் தலைமைக்கான செல்வாக்கு கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
உதாரணத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையுண்ட மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ் அரசியல் தலைமையைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி உரையாற்றுவதை பல்கலைக்கழக மாணவர்கள் அறவே விரும்பவில்லை.
இஃது தமிழ் அரசியல் தலைமைக்கு விழுந்த பலத்த அடி எனலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புக்களில் இருந்த ஒரு சில மாணவர்களுக்கு முன்பு மடிக்கணனிகளை வழங்கி அவர்கள் மூலம் தமக்கு ஆதரவைத் தேடியவர்களின் உண்மைகள் இப்போது பல்கலைக்கழக மாணவர்களால் அறியப்பட்டுள்ளது.
தவிர, பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்படுகின்ற நிலைமைக்கு எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் பதவியாசையும் அரசுடனான ஒத்துப்போதலும் ஏதோவொரு வகையில் காரணம் என்று உணரப்பட்டதன் அடிப்படையிலேயே தமிழ் அரசியல் தலைமை சார்ந்தவர்கள் அஞ்சலி உரையாற்றுவதை யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் விரும்பவில்லை.
இவற்றுக்கு மேலாக பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரு வரின் உடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கு சென்ற தமிழ் அரசியல் தலைமையின் முக்கிய பிரதிநிதியுடன் பல்கலைக் கழக மாணவர்கள் முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலைமையானது தமிழ் அரசியல் தலைமையின் எதிர்காலம் படுமோசமாக மாற்றமடைந்து செல்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
ஆக, தமிழ் அரசியல் தலைமை தொடர்ந்தும் தவறு இழைக்குமாயின் அதன் அரசியல் அஸ்தமனம் உறுதியாகுவது தவிர்க்க முடியாதது என்பது சர்வ நிச்சயம்.
நிலைமைகள் தமக்குப் பாதகமாக இருக்கிறது என்பதைக்கூட உணரமுடியாத அளவிலேயே தமிழ் அரசியல் தலைமை இருக்கிறது என்பதற்கு மிக அண்மைய உதாரணம் வடக்கு மாகாண சபையில் நடந்த பிரதி அவைத் தலைவர் தெரிவாகும்.
தமிழ் மக்கள் தங்களின் தகைசார்ந்த தலைவராக முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சர்வதேச சமூகம் வடக்கின் முதலமைச்சருக்கு அதீதமான மதிப்பளிக்கின்ற நிலையில்,
வடக்கு மாகாண சபையில் இருக்கக்கூடிய ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காக முதலமைச்சருக்கு எதிராகச் செயற்படுவதானது தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உண்மைகள் அவசரமாக உணரப்பட்டு செம்மை செய்யாதவிடத்து இதன்விளைவு, தமிழ் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் கடுமையாக எதிர்ப்பதாக இருக்கும்.