Breaking News

ஆவா குழுவின் பின்னால் இராணுவம் இல்லை – வடக்கு ஆளுனர் மறுப்பு



வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவத்தினரே இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆவா குழு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டது குறித்து வட மாகாண ஆளுனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஆளுனர் ரெஜினோல்ட் குரே,

“எனக்குக் கிடைத்த தகவல்களின் மூலம், ஆவா குழுவின் பின்னால், சிறிலங்கா இராணுவம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

எந்தவொரு தகவலையும் பகிரங்கமாக கூறுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாட வேண்டும்.

ஊடகங்களுக்கு இதனைச் சொல்வதற்குப் பதிலாக, அமைச்சர் முதலில் அமைச்சரவையிலும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்புச் செயலர், அதிபர், பிரதமருடனும் கலந்துரையாடியிருந்தால் பரவாயில்லை.

அமைச்சர் ராஜிதவின் கருத்தின் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது. இராணுவப் புலனாய்வுப் பிரிவைத் தான விசாரிக்க வேண்டும்.

இந்தக் குழுக்கள் தொடர்பான விசாரிக்க சிறிலங்கா அதிபர் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளார்.

அமைச்சரின் கருத்தை நான் ஏற்கவோ மறுக்கவோ மாட்டேன். அவரது கருத்தை உறுதிப்படுத்துவதற்கு இரவில் வீதிகளில் என்னால் நடந்து செல்ல முடியாது.

ஆவா குழுவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு யாழ்ப்பாணத்தில் என்னைச் சந்தித்து சிலர் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின்னர், ஆவா குழுவைக் கட்டுப்படுத்துமாறு சிறிலங்கா காவல்துறையை கேட்டுக் கொண்டேன்

யாழ். குடாநாட்டில், உள்ள மிக அதிகளவான மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் பழக்கம் என்பன, வடக்கில் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கேரள கஞ்சா பாவனை மற்றும் வேலையில்லா பிரச்சினையும் இதற்கு காரணமாக இருக்கக் கூடும்.வடக்கில் மிக அதிகளவான மதுபானசாலைகள் உள்ளன. யாழ். நகரில் மாத்திரம், 50 மதுபானசாலைகள் உள்ளன.

போதை மற்றும் மதுபானம் என்பன குற்றவியல் செயற்பாடுகளுக்கு உதவியாக அமைந்துள்ளன.யாழ்ப்பாண இளைஞர்களை அழிப்பதற்கு இத்தகைய பழக்கங்களை அரசாங்கம் ஊக்குவிப்பதாக சில தலைவர்களை குற்றம்சாட்டுகின்றனர். அது தவறானது.

இந்தப் பழக்க வழக்கங்களை அரசாங்கம் தனியே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சமூகங்களின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.