Breaking News

விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும். மைத்திரி சூளுரை



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து விரைவில் ஆட்சியமைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான பயணத்திலேயே தற்போது பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பை அண்மித்த பகுதியான மஹரகமையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மேம்பாட்டு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன “சுந்திரக் கட்சியியை ஆரம்பித்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் புதல்வர் அநுர பண்டாரநாயக்க கட்சியை விட்டு வெளியேறினார்.

பண்டாரநாயக்கவின் மருமகன் விஜயகுமாரதுங்க புதிய கட்சி ஒன்றை உருவாக்கினார். அந்த கட்சியுடன் எவ்வாறான பிரபலங்கள் இணைந்துகொண்டார்கள் என்று எமக்குத் தெரியும். எனினும் எதுவும் சாத்தியப்படவில்லை.

1994ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையை ஏற்றுக்கொண்டு தங்களது புதிய கட்சிகளை விட்டு அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கினர். சுதந்திரக் கட்சி என்பது வீழ்ந்து வீழ்ந்து மேலெழுந்த ஒரு கட்சியாகும். இந்த கட்சியின் எதிர்காலம் மிகத் தெளிவாக தெரிகிறது.

கட்சியின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த கட்சியின் சிறப்பான எதிர்காலத்திற்கு அமைய, எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும். அந்த பயணத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு வெற்றிபெறுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த நான் விரும்புகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற திறைசேரி முறிகள் விற்பனையில், இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அத்துடன் குறித்த விசாரணைகள் பக்கசார்பற்றதாகவும் சுயாதீனமாகவும் உட்படுத்தப்படும் என்றும் கூறிய மைத்திரிபால சிறிசேன, முன்னைய அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறி அனைவரினதும் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டு புதிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தவறிழைத்த ஒரு பிரிவினருக்கு தண்டனை வழங்கவும் மற்றுமொரு பிரிவினருக்கு தவறிழைப்பதற்கு இடமளிப்பதற்காகவும் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.