Breaking News

யாழ்பாணத்தை பதற்ற சூழலில் வைக்க அரச முயற்ச்சி ; ஆராய தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

யாழ்ப்பாணத்தில்  தற்போது ஏற்பட்டுள்ள  பதற்ற சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை  கூட்டுமாறு ரெலோ கட்சி  ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினரும்  தமிழ்  ஈழ விடுதலை  இயக்கத்தின்  செயலாளருமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 20  ஆம் திகதி இரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழல் நிலவியுள்ளது.

அரச புலனாய்வாளர்கள் மீதான வாள் வெட்டு மற்றும் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் என யாழ்ப்பாணத்தில்  அமைதியினமையை உருவாக்கும்  முயற்ச்சியில் அரச புலனாய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் தமிழர் தரப்பு கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈழ புரட்சிகர விடுதலைமுன்னணி, ஜனநாயக  மக்கள்  விடுதலைக்   களகம், தமிழ் தேசிய  மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர்  விடுதலைக்  கூட்டணி, ஆகிய கட்சிகளுக்கு   தமிழ் ஈழ விடுதலை  இயக்கம் அழைப்பு  விடுத்துள்ளது.