மொழியினால் அரச பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது - மனோ
மொழியை அடிப்படையாகக் கொண்டு அரச பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எச்சந்தர்ப்ப த்திலும் இடமளிக்க முடியாது என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் வடக்கிற்குச் சென்று தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி தமிழ் மக்களிடையே வீரர்களாவதற்கு முயற்சித்தாலும் தான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் வீரர்களாகி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பல்லேகலவில் அமைந்துள்ள மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் இந்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை. பயங்கரவாதத்தை நாம் விரும்பவில்லை. மொழி, இனம், மதம், அரசியல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரிவினைவாதமோபயங்கிரவாதமோ மீண்டும் ஏற்படாதிருக்கும்படி பாரத்துக் கொள்ள வேண்டும்.
வடகிழக்கு மட்டுமின்றி தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசம் மத்திய மாகாணமே. தமிழ், சிங்கள மக்களிடையே மொழிப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.
இதனால் வடகிழக்கு உள்ளுராட்சி நிறுவனங்களில் சிங்கள மொழியும் தெற்கில் தமிழ் மொழியும் பிரபலம் அடைகின்றது. அதனால் எதிர்வரும் காலங்களில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் சிங்கள மொழி அரச மொழியாக கருதப்பட்டதினால் 1980 ஆம் ஆண்டு இனவாதம் எழுப்பப்பட்டது.
இருப்பினும் நான் முன்வைப்பது இந்நாட்டு அரச மொழியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பரிந்துரைக்கப்பட்டாலும் சிங்களம், தமிழ் மொழி தொடர்பில் முக்கியத்துவம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் மொழி அதிகாரிகள் இணைத்துக் கொள்ளும் போது மொழித் திறன் பற்றி கூடிய அவதானம் செலுத்தப்படும். அதற்காக அவர்களுக்கு புள்ளிகள் வழங்கும் போது முக்கியத்துவம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.