Breaking News

11,319 தனியார் தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து

வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்று இந்தியாவில் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து பெறப்படும் பண உதவியை முறைப்படுத்த 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டு சட்டம் (எப்.சி.ஆர்.ஏ.) நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டத்தின் கீழ் நம் நாட்டில் 33 ஆயிரத்து 138 தனியார் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டன. இந்த ஆண்டில் 27 ஆயிரத்து 810 அமைப்புகளின் உரிமம் காலாவதியாகி புதுப்பிக்க வேண்டி இருந்தது. இந்த தொண்டு நிறுவனங்களின் உரிமம் காலாவதியாகும் தகவலை கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டித்த உள்துறை அமைச்சகம், ஜூன் 30-ந் தேதிக்குள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என கூறியது.

இந்த நிலையில், உரிமம் புதுப்பிப்பதற்காக 16 ஆயிரத்து 491 அமைப்புகள் மட்டுமே விண்ணப்பித்து இருந்தன. இதனால் உரிமம் புதுப்பிக்காத சென்னை லயோலா கல்லூரி சங்கம், அதானி பவுண்டேசன், இந்திய மருத்துவ சங்கம், ஆக்ஸ்பேம் இந்தியா அறக்கட்டளை உள்ளிட்ட 11 ஆயிரத்து 319 அமைப்புகளின் உரிமம் இந்த மாதம் 1-ந் தேதி முதல் ரத்தாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தெரிவித்தது. 

மேலும், தேசிய வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி உரிய ஆவணங்களுடன் உரிமம் பெற விண்ணப்பித்து இருந்த அரசு சாராத 25 தனியார் தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.