காணாமல்போனவர்களின் எலும்புத் துகலாகக்கூட இருக்கலாம்! - வியாழேந்திரன்
கடந்த 30 ஆண்டு காலமாக கடந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட சதிகளால் இனப்படுகொலைக்குள்ளாகி உயிர்களை இழந்த கிழக்குத் தமிழர்களுக்கும் சரியான தீர்வினை வழங்கவும் முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடக்கில் தமிழர்களை அதிகளவில் இனப்படுகொலை செய்த இடமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அடையாளப்படுத்தப்பட்டு தற்போது ஐ.நா வரை தமிழ்த்தரப்பினர் நீதி கோரி சென்றுள்ளனர்.
அதுபோன்றே கிழக்கிலும் தமிழர் பிரதேசங்களான மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான், முறக்கொட்டாஞ்சேனை, கொக்குவில், பிள்ளையாரடி, பனிச்சையடி, வந்தாறுமூலை, மகிழடித்தீவு போன்ற பல பிரதேசங்களில் வாழ்ந்த 300க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மிகக் கொடூரமாக இனப்படுகொலை செய்திருந்திருந்தனர். இப்படுகொலை இலங்கையில் அன்று நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை என்பதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது.
இந்த இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட உயிர்களில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், இளைஞர், யுவதிகள் எனப் பலர் இதன்போது கொடூரமாக வெட்டப்பட்டும், டயர் போட்டு எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் போயுள்ளனர்.
இந்தப் படுகொலையில் எச்சமாகவே அண்மையில் முறக்கொட்டான்சேனையில் சுமார் 78 குடும்பங்களுக்குச் சொந்தமான வீட்டுக் காணிகள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கான வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.
அதனடிப்படையில் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட வானதி உதயகுமாரின் (50 வயது) காணியில் மலசலகூட அமைப்பதற்கான குழி தோண்டலின் போது எலும்புத் துகள்கலும், டயர் மற்றும் ரயில் சிலிப்பர் கட்டைகளும் எரிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் காணியிலிருந்து மீட்ட எலும்புத் துகல்கள் பற்றி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற நிலையில் இது உண்மையில் கடந்த 1990 ஆம் ஆண்டு காணாமல்போன பலர் குறித்த இராணுவமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களது எலும்புத் துகலாகக்கூட இவை இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பேர் செப்டெம்பர் 5 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டும் பலர் காணாமலும் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் “தமிழர்களாக” பிறந்த ஒரே காரணத்திற்காக வடகிழக்கில் கடந்த அரசாங்கங்களின் திட்டமிட்ட சதிகளால் இனப்படுகொலைக்குள்ளாகி பல உயிர்களை இழந்துள்ளனர்.
அந்த வகையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துகள்களை சரியான வகையில் ஆய்வுக்குட்படுத்தி அவை எந்தக் காலத்தில் எந்த சந்தர்ப்பத்தின் போது படுகொலை செய்யப்பட்ட உயிர்களாக இருக்கலாம் என்பதை பக்கச் சார்பின்றி நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு, உரிய விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்ட கிழக்குத் தமிழர்களுக்கும் இழப்பீடுக்கான சரியான தீர்வினை வழங்கவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்