இந்திய பிரதமர் மோடிக்கு 10 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!
இந்தியா ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு 10 வயது சிறுவன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள 505 கிராமங்களில் என்சிபாலிட்டிஸ் என்ற வைரஸால் ஏற்படும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 73 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்றவற்றின் மூலம் இந்த நோய் தொற்றை தெரிந்துகொள்ளலாம்.
இந்தநிலையில், மூளைக் காய்ச்சலைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுமாறு போல்கண்டா தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்புப் பயிலும் உமேஷ் மாதி எனும் 10 வயது சிறுவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த சிறுவன் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஜப்பானிய காய்ச்சலால் தனது நண்பர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்வேறு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நீங்கள், எங்கள் ஊருக்கு வந்து குழந்தைகளின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று உருக்கத்துடன் அந்த சிறுவன் வலியுறுத்தியுள்ளார்.