Breaking News

வடமாகாண மரநடுகை மாதம் மரநடுகையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறது

வடமாகாண விவசாய அமைச்சால் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகள் மரநடுகை மாதம் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது தடவையாக மரநடுகை மாதம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்கள் சிலரின் அபிப்பிராயங்கள் 30.10.2016 அன்று தினக்குரலில் வெளியாகியுள்ளது. அது இங்கே வலையேற்றப்பட்டுள்ளது.

"வீட்டுக்கு ஒரு வீரரை வளர்த்தவர்கள் நாங்கள் அவர்கள் நினைவாக விட்டுக்கொரு மரத்தை வளர்ப்போம்"

லோ.தர்சனன்
அரசியல்துறை மாணவன் - யாழ்.பல்கலைக்கழகம்


வடமாகாணம் ஒரு காலத்தில் இப்போதுள்ளதைவிடப் பசுமை வாய்ந்ததாகவும், இயற்கையின் வனப்பை இரசிப்பதற்குரிய ஓர் இடமாகாவும் விளங்கியது.

ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தினால் மரங்களும் காடுகளும் கரிக்கட்டையாக எரிந்து கிடக்கின்றன. இதனைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்த மண்ணில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அவர்களுக்கு இது தொடர்பான விழிப்பை ஏற்படுத்திச் செயற்பட வைக்க வேண்டிய பொறுப்பு இன்று வடக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் வடக்கு மாகாணசபைக்கு இருக்கிறது. வடக்கு மாகாணசபைமீது விமர்சனங்கள் இருந்தாலும்,இந்த விடயத்தில் மாகாணசபையை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது. கார்த்திகை எம்மண்ணுக்கு மழை நீரைச் சிந்துகின்ற மாதம். நாம் விழிநீரைச் சிந்துகின்ற மாதமும் இதுதான். கார்த்திகை எம்மண்ணுக்காக இரத்தம் சிந்திய, தமிழ்மக்களின் விடிவுக்காக உயிர் துறந்த வீரமறவர்களை நினைந்து, கண்ணீர் சிந்திச் சுடரேற்றுகின்ற மாதம். இவை மாத்திரமல்லாமல் கார்த்திகைக்கு இன்னுமொரு விசேடமும் இருக்கிறது. இந்த மாதத்தில்தான் வீடுகள்தோறும் விளக்கேற்றி வழிபடும் தீபத் திருநாளும் வருகின்றது.

மொத்தத்தில் தமிழர்களைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் என்பது பன்னிரண்டு மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகவே கருதப்படுகிறது. இதனால்தான் கார்த்திகை மாதத்தை வடமாகாண சுற்றுச் சூழல் அமைச்சு வடமாகாண மரநடுகை மாதமாகக் கொண்டாடி வருகிறது. இந்தக் காரணங்களால்தான் மரநடுகை மாதம் மக்களிடையே சென்றடைந்தும் இருக்கிறது.

வடமாகாண மரநடுகை மாதத்தின்மூலம்,எதிர்கால சந்ததியினரையும் சூழலையும் ஆரோக்கியமான பாதைக்குக் கொண்டு செல்ல வித்திடப்பட்டுள்ளது. அன்று வீட்டுக்கு ஒரு வீரர் தேவை என்றார்கள். வீரர்களை வளர்த்தோம். இன்று அவர்களின் நினைவாக வீட்டுக்கொரு மரத்தை வளர்ப்போம். 

"மரநடுகை மாதம் தொலை நோக்குடன் கூடிய 
உணர்வு பூர்வமான சிந்தனை"

இ.இராஜேஸ்வரன்
(ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்)
தலைவர் - ஞானபாஸ்கரோதய சங்கம், கல்வியங்காடு

நகரமயமாக்கல் திட்டங்களால் பயன்தரு மரங்கள் அழிக்கப்படுகின்றன. வளவுகளைச் சுற்றியிருந்த வேலிகள் மதில்களாகின்றன. வீதி அகலிப்பால் ஆயிரமாயிரம் நிழல் மரங்கள் தறிக்கப்பட்டு மின்கம்பங்களும் தொலைத் தொடர்புக் கம்பங்களும்தான் வீதியெங்கும் காணப்படுகின்றன.

முன்னர் சித்திரைச் சிறுமாரி, ஆடி உழவு மழை, ஐப்பசி பெரும்போக மழையென்று வருடத்தில் பல தடவைகள் மழை பொழியும். ஆனால், மரங்கள் அழிந்ததன் காரணமாகப் பருவமழை பொய்த்துவிட்டது. அந்தவகையில், மரநடுகை மாதம் என்பதை வடக்கு மாகாணசபையின் தொலை நோக்குடன் கூடிய உணர்வுபூர்வமான சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு மரநடுகை மாதம் பற்றி விளக்கம் அளிப்பதற்காக பொது அமைப்புகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் எமக்குத் தேவையான மரங்களின் விபரங்கள் விவசாய அமைச்சின் அலுவலர்களினால் பெறப்பட்டது. ஞானபாஸ்கரோதய சங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட நான் எமது விளையாட்டு மைதானத்தில் நாட்டுவதற்காக ஐம்பது தேக்க மரக்கன்றுகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எங்களுக்கு இருபத்தைந்து தேக்கங்கன்றுகள்தான் கிடைத்தன.

எங்களுக்குத் தரப்பட்ட 25 தேக்கங்கன்றுகளையும் விளையாட்டு மைதானத்தில் பத்து அடிக்கு ஒன்றாக எமது இளைஞர்கள் ஒவ்வொருவரும் தமது கைகளால் நாட்டினார்கள். தினமும் நீர் ஊற்றிப் பராமரித்து வருகின்றோம். தற்போது இருபத்துமூன்று தேக்கங்கன்றுகள் நன்றாகச் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. எங்களைப்போன்றே பொது அமைப்புகளும் பொதுமக்களும் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிலத்தில் ஏதாவது பயன்தரு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். இதுவே எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்யக்கூடிய பெரிய கைங்கரியம். 

"வடமாகாண மரநடுகை மாதம் மரநடுகையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறது"

த.யுகேஸ்
ஆசிரியர், யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு தாபிக்கப்பட்ட வடமாகாணசபை, ஏனைய மாகாணசபைகளைப்போல அல்லாது வித்தியாசமான இயங்கு தளத்தில் இருந்து செயற்படவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. ஒருபுறம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பங்களிப்பையும் இன நல்லிணக்கத்துக்கான நாகரிகமான அரசியல் பாணியையும் கொண்டு பயணிப்பதோடு, இன்னொரு புறம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அத்தோடு, தமிழ்த்தேசிய இனம் தற்போது எதர்கொண்டுள்ள பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்ற கவசமாகவும் தொழிற்பட வேண்டியுள்ளது. 

தேசிய இனம் என்பது வெறுமனே ஒரு மக்கள்திரள் அல்ல. அம்மக்களுக்கான நிலப்பகுதி, அவர்களுக்குரிய மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், இயற்கைச் சூழல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பதமே தேசிய இனம். இவை அனைத்துக்குமான மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொண்ட ஒரு வாழ்வுக்குப் பெயரே தேசிய வாழ்வு. அந்த வகையில் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக உள்ள இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வடக்கு மாகாணசபைக்கு இருக்கிறது. 

சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாளுவதற்கான அதிகாரம் மத்திய அரசால் மாகாணங்களுக்கு முழுமையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே, விவசாய அமைச்சு தன்னால் முடிந்த அளவுக்குச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் மரநடுகை மாதமும். 

வடமாகாண மரநடுகை மாதம் மக்கள் மத்தியில் மரங்களை நடவேண்டும் என்ற அருட்டுணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மரநடுகை மாதம் கொண்டாட ஆரம்பித்த பின்னர் மக்களிடையேயும் பொது அமைப்புகளிடையேயும் மரங்களை நட்டுப் பராமரிக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வடமாகாண மரநடுகை மாதம் மரநடுகையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வருகிறது. ஒரு அரசின் கடமையும் அதுதான். அந்த வகையில் வடக்கு மாகாணசபையின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன். 

"வடக்கின் தாவர உற்பத்தி யாளர்களுக்கு மரநடுகைமாதம் ஒரு வரப்பிரசாதம்"

நா.காசிநாதன்
தாவர உற்பத்தியாளர்
அம்பிகை தோட்;டம், முல்லைத்தீவு

மரக்கன்றுகள் உற்பத்தியாளன் என்றவகையில் நானும் என்னைப் போன்ற பண்ணையாளர்களும் மரநடுகை மாதத்தால் பல நன்மைகளைப் பெற்று வருகிறோம்.வடக்கு மாகாணசபை உருவாக முன்னரும் அரச திணைக்களங்களினால் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அப்போதெல்லாம் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. தெற்கிலிருந்தே மரக்கன்றுகளை வாங்கி வந்து வழங்குவார்கள்.

வடமாகாணசபை மரநடுகை மாதம் கொண்டாட ஆரம்பித்தபோது, விவசாய அமைச்சர் வடக்கில் உள்ள தாவர உற்பத்திப் பண்ணையாளர்களையெல்லாம் அழைத்து இதுபற்றி விளக்கமாகச் சொல்லியிருந்தார். இப்போது மரக்கன்று உற்பத்தியாளர்கள் சேர்ந்து வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

மரநடுகை மாத காலத்தில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஒருவார காலத்துக்கு விவசாய அமைச்சால் மலர்க் கண்காட்சி ஒழுங்கு செய்யப்படும். இந்தமுறையும் கார்த்திகை 5ஆம் திகதியில் இருந்து 11ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதில் வருடம் தப்பாமல் கலந்து கொள்கிறேன். முன்கூட்டியே திட்டமிடுவதால் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கிறது. இந்த நாட்களில் பெருந்தொகையான மரக்கன்றுகளை எங்களால் விற்பனை செய்யக் கூடியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், கண்காட்சியில் வடக்கில் உள்ள பண்ணையாளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி கலந்துரையாடி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது.

கண்காட்சியைப் பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் வருகிறார்கள். இதனால் எங்களுக்குப் பெரிய விளம்பரம் கிடைக்கிறது. எமது பண்ணையின் தரத்தை நேரில் இங்கு அறிந்து கொள்வதால், கண்காட்சி முடிந்த பிறகும் பலர் எங்களுடைய பண்ணைகளைத் தேடி வந்து மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

அரச திணைக்களங்களினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பார்வை எங்களைப்போன்ற உள்ளூர்ப் பண்ணையாளர்களின் மீது இப்போது திரும்பியிருக்கிறது. மனந்திறந்து சொல்வதென்றால் மரநடுகை மாதம் ஆரம்பித்த பிறகு எங்களது வருவாய் உயர்ந்திருக்கிறது. மரநடுகை மாதம் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். 

"மரநடுகை மாதமும் மலர்க் கண்காட்சியும் ஒரு செய்தியைச் சொல்லாமல் சொல்கிறது"

இ.சுந்தரலிங்கம்
தாவர உற்பத்தியாளர்
அக்றோ கெயார், கிளிநொச்சி

மரநடுகை மாதத்தில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாகக் கண்காட்சியில் கலந்து கொண்ட நான் இப்போது மூன்றாவது முறையாகவும் போகப் போகின்றேன். நல்லூரில் நடைபெறும் கண்காட்சிக்கு கிளிநொச்சியில் இருக்கும் நான் வாகனம் பிடித்து மரக்கன்றுகளை ஏற்றிச் சென்று விற்கிறேன் என்றால் போதியளவு வருமானம் கிடைக்கிறது என்றுதானே அர்த்தம். நான் மட்டுமல்ல, கண்காட்சியில் பங்கேற்கிற தாவர உற்பத்தியாளர்கள் எல்லோருமே கண்காட்சி முடிந்து போகும்போது மனநிறைவோடுதான் போகிறோம். அந்த அளவுக்கு மரநடுகை மாதத்துக்கும் மலர்க் கண்காட்சிக்கும் வரவேற்பு இருக்கிறது.

இந்த வரவேற்புக்குப் பின்னால் வலுவான காரணங்கள் இருக்கிறது. கார்த்திகைப் பூ பூக்கும் மாதத்தில் மரநடுகை மாதம் கொண்டாடப்படுவதும், கிட்டு பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெறுவதும் ஒரு செய்தியைச் சொல்லாமல் சொல்கிறது. பொதுமக்களும் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால், இந்த அளவுக்கு வரவேற்பு இருக்காது. கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்து மரங்களை வாங்கிப் போகின்றவர்களும் இருக்கிறார்கள்.

நட்ட மரம் பட்டுப் போச்சுது என்று குறை சொல்கிற சிலரையும் எனக்குத் தெரியும். விவசாய அமைச்சு மரங்களை வழங்கினால் விவசாய அமைச்சர்தான் அந்த மரங்களுக்குத்தண்ணீர் வார்க்க வேண்டும், பட்ட மரங்களுக்கு விவசாய அமைச்சர்தான் பொறுப்பு என்ற ரீதியில் பேசுவது அரசியல் விதண்டாவாதம்.

இப்படிப் பேசுபவர்கள் மரங்கள் பட்டுப் போகவேண்டுமென்று நினைப்பவர்கள். தெருவில் விழுந்து கிடந்த முல்லைக் கொடிக்குக் கொழுகொம்பாகத் தேரை விட்டுப் போன பாரி மன்னர் பரம்பரை நாங்கள். இது புலவர்களின் கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், மரங்களைப் பராமரிக்கின்ற பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. தெருவோரத்தில் நட்ட ஒரு மரம் வாடி நிற்கிறதெண்டால் அதற்கு அயலில் உள்ள வீட்டுக்காரருக்கு ஈர மனமும் பொதுச் சிந்தனையும் இல்லை என்றுதான் அர்த்தம்.

எங்களுக்கும் ஒரு குறை இருக்கிறது. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி முடிந்த பிறகு கிளிநொச்சியிலும் கண்காட்சியை நடாத்துவதாக இருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்திலேயே பெருமளவுக்குக் கன்றுகள் முடிந்துவிட்டதாலும் வழமைக்கு மாறான கடும் மழையாலும் அது கைகூடவில்லை. வருங்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் மலர்க் கண்காட்சியை நடாத்துவதற்கு விவசாய அமைச்சு ஒழுங்குகள் செய்துதர வேண்டும்.

"கடந்த வருட மரநடுகை மாதத்தில் நானும் பயன் பெற்றேன்"

அருட்திரு சூ.டேமியன்
அதிபர் - இறையியல் கல்லூரி, கொழும்புத்துறை


இன்று சுற்றுச்சூழல் சீரழிகிறதென்று பரவலாகப் பேசப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் மரங்களை வெட்டுவதும் காடுகளை அழிப்பதும். இந்த அழிப்பின் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. காலநிலையில் மாற்றம் காணப்படுகிறது. மழையில்லாமல் வறட்சி ஏற்படுகிறது. இந்தநிலை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது அதிகரித்துக்கொண்டே போனால் எங்கள் வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

இதை உணர்ந்தே வடமாகாணசபை இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்திச் சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதில் மலர்க்கண்காட்சியும் ஒன்று. பார்வையிடவரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்கள். இது, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும், மரநடுகையில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளதைக் கண்கூடாக நான் கண்டுள்ளேன். இந்தச்சேவை காலத்துக்கேற்ற தேவையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுமாகும். 

கடந்த வருட மரநடுகை மாதத்தில் விவசாய அமைச்சின் ஊடாக மரங்களைப் பெற்று நானும் பயன் அடைந்துள்ளேன். இந்த வருடமும் கார்த்திகை மாதம் முழுவதும் மரநடுகை மாதமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் மரங்களை நாட்டி சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் நாட்டி நற்பயனைப் பெறுவோமாக.

தொடர்புடைய செய்தி


மரணித்தவர்களின்; நினைவாக முதல்வர் தலைமையில் மரநடுகை