நவாஸ் ஷெரீப் அரசின் மறுஆய்வு மனு நிராகரிப்பு
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரம் பற்றிய தீர்ப்புக்கு எதிரான நவாஸ் ஷெரீப் அரசின் மறுஆய்வு மனுவை, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் வரி விகிதங்களை உயர்த்த பிரதமர் நவாஸ் ஷெரீப் முடிவு எடுத்து, இது தொடர்பாக அரசின் ஆணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சாதிக் நிசார் விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், “பிரதமர் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசாங்கம்தான் முடிவு எடுக்க வேண்டும். மந்திரிசபையின் முடிவுதான் அரசாங்கத்தின் முடிவே தவிர பிரதமரின் முடிவு அல்ல” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “மந்திரிசபையின் ஒப்புதல் பெறாமல் ஒரு அவசர சட்டத்தை வெளியிட்டால் அதுவும் செல்லத்தக்கதல்ல. அதேபோன்றுதான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிற எந்தவொரு மசோதாவும், மந்திரிசபையின் ஒப்புதலை முன்கூட்டியே பெற வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி நவாஸ் ஷெரீப் அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நிதி அமைச்சகம் மனு தாக்கல் செய்தது.
அதில், “நாட்டின் தலைமை நிர்வாகி என்ற அடிப்படையில் பிரதமருக்கு அதிகாரங்கள் உண்டு. அது சுதந்திரமானது” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி மியான் சாதிக் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது நவாஸ் ஷெரீப் அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகமது வாக்கர் ரானா ஆஜராகி வாதாடினார்.
அவர், “பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் செலவின அதிகாரம் கிடையாது என்று கோர்ட்டு கூறி தவறு செய்துள்ளது. இதற்கான அதிகாரத்தை அரசியல் சாசன சட்டம் பிரிவு 83 வழங்கி உள்ளது.” என்றார்.
மேலும், “அரசியல் சாசனத்தை இயற்றியவர்கள், ஒரு பலம் வாய்ந்த தலைமை நிர்வாகி அதாவது பிரதமர் இருக்க வேண்டும் என்று விரும்பினர். கூட்டு பொறுப்பு என்பதை இந்த கோர்ட்டு தவறாக அர்த்தம் கொண்டு விட்டது. இது கூட்டாக செயல்பட வேண்டும் என்று பொருள்படாது” என கூறினார்.
ஆனால் முடிவில் நவாஸ் ஷெரீப் அரசின் மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர். அதில், “சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் தலையிடுவதற்கு ஒன்றும் இல்லை” என்று நீதிபதிகள் கூறி விட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பிரதமர் மந்திரிசபையை புறக்கணித்து விட்டு, தாமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்படி செய்தால் அது தகாதது. அது அரசியல் சாசனம் சார்ந்த ஜனநாயகத்துக்கு நேர் எதிரானது” என கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நவாஸ் ஷெரீப் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.