ஆவா என்ற பெயரில் எழுக தமிழ் ஏற்பாட்டாளர்களை ஒடுக்க சதி – கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு உட்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற பெயரில் தமது கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரையும் ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார் கைதுசெய்திருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, சில்லாலை பிரதேசத்தைச் 29 வயதுடைய அன்டனி தாஸீஸியஸ் அரவிந் என்ற இளைஞர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கந்தர்மடம் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்காக இளைஞர்களை திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவரான அரவிந்தின் கைது பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் ஆதரவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியை அடுத்த தென்பகுதியிலுள்ள மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் உட்பட சிங்கள பேரினவாத சக்திகள் மாத்திரமன்றி, அரசாங்கமும் குழம்பிப்போயுள்ளதாகவும் குறிப்பிட்ட செல்வராஜா கஜேந்திரன், இந்தப் பின்னணியிலேயே அரவிந்தனின் கைது இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுக தமிழ் பேரணிக்க தலைமை தாங்கிய வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை ஒரு இனவாதியாகவும், மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி முயற்சிக்கின்றார் என்றும் குற்றம்சாட்டி, அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் எழும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, எழுக தமிழ் பேரணியை ஏற்பாடுசெய்தவர்களின் ஒருவரான அரவிந்தனை கைதுசெய்திருப்பதாகவும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.
அதேவேளை ஆவா குழு திடீரென இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டமை மற்றும் மாணவர் இருவர் படுகொலையை அடுத்து, சுன்னாகத்தில் வைத்து கடந்த ஓக்டோபர் 24 ஆம் திகதி பட்டப் பகலில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஆகியவை, எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்தவர்களை ஒடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.