ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா?
அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடைமுறைகளைத் துவக்குவதை, இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் தாமதப்படுத்த அனுமதிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கத்தில் நிலவும் உச்சபட்ச குழப்பத்தை இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்துவதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கருத்து
நீதிமன்றத் தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள, பிரிட்டன் வெளியேற்றம் தொடர்பாக பேச்சு நடத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதி கய் வெரோஃப்ஸ்டட், லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தைஇதில் ஈடுபடுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். இருபுறமும், நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவது, பொருத்தமான, இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் இதுகுறித்து மேலும் தெளிவாக்க வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் கட்சியின் மூத்த பிரதிநிதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.