முற்றுகிறது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறுகல்
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்கிற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை விடுக்கவுள்ளார்.
கடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.
2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும், சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிக வட்டிக்கு கடன் வழங்கப்பட்டது என்றால், எதற்காக மீண்டும் சீனாவிடம் நிதி உதவி கேட்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மறுப்பு வெளியிட்டுள்ளார். எனினும், வெளிநாட்டு தூதுவர் ஒருவர் வெளியிட்ட கருத்து என்ற வகையில் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை கவனத்தில் கொண்டுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பியதும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட, சீனத் தூதுவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை அனுப்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சீனத் தூதுவரின் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சீனத் தூதுவரின் கருத்துக்களை நட்பு நாடு ஒன்றின் தூதுவர் வெளியிட்ட கருத்துக்கள் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் கூறியதில் எந்த அடிப்படையும் இல்லை. நாங்கள் ஒரு இறைமையுள்ள நாடு. அவ்வாறே நடத்தப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.