மீனவர்கள் விவகாரம் குறித்து புதுடெல்லியில் இன்று பேச்சு
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினை குறித்து, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான, குழுவுக்கும் இடையில் புதுடெல்லியில் இன்று இந்தப் பேச்சுக்கள் நடக்கவுள்ளன.
கடந்த மாதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே இன்றைய பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய பேச்சுக்களில் பங்கேற்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவும் புதுடெல்லி சென்றுள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை புதுடெல்லியில் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.
இந்தப் பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையிலேயே இன்று அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன..