மகனுடைய மரணத்தில் இலாபம் தேடாதீர்கள் – கஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள்…!
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராச கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.
குறித்த மாணவர்கள் தொடர்பிலும், மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பிலும் அண்மைய நாட்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள நடராச கஜனின் தாயார் சரோஜினி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,
எனது மகனுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இனிமேல் எந்தவொரு பிள்ளைகளுக்கும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ எனது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கொலை செய்யுமாறு நான் கோரவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு, நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, எனது பிள்ளைக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது. எனது பிள்ளையின் பெயரை அவ்வாறு தொடர்புப்படுத்த தான் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.