தையிட்டியில் பாழடைந்த நிலையில் காணப்படும் ஆலயம்
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நேற்று (04) பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் பாழடைந்த நிலையில் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது.
தையிட்டி வடக்கு பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலே முற்று முழுதாகச் சிதைவடைந்த நிலையில் இடிந்து பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
தமது காணிகள் மற்றும் வீடுகளை கடந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வையிட்ட சென்ற அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றி பற்றைகள் வளர்ந்த நிலையில், ஆலயத்திலுள்ள சிலைகள் அனைத்தும் சிதைவுற்று, அடையாளமற்றுக் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆலயத்தின் கோபுரம் மற்றும் சூரன் சிலை, தேர் என்பன உருக்குலைந்த நிலையில் கவனிப்பாரற்று காணப்பட்டது.