Breaking News

லசந்தவின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க கோத்தா உத்தரவு – அம்பலமான இரகசிய ஆவணம்



சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இந்த கண்காணிப்பு தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்ற குறிப்பையும் அதில் அவர் எழுதியுள்ளார்.

2009 ஜனவரி 9ஆம் நாள் லசந் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக, 2008 செப்ரெம்பர் 10ஆம் நாள் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளவற்றில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் கைத்தொலைபேசி இலக்கமும் அடங்கியுள்ளது.

ஏனைய தொலைபேசி இலக்கங்களில் பல அரசியல் பிரமுகர்களுடையவை என்றும் தெரியவருகிறது.