Breaking News

மாவீரர் நாள் உரை 2003


எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று மாவீரர் நாள்.
இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். இன்று, தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.
அன்றைய தமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் அந்நியருக்கும் அயலவருக்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த தமிழீழ தேசம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இன்று எமது தாயகத்தின் பெருநிலப் பரப்பில் எமது தன்னாட்சி நடைபெறுகிறது. ஒரு நீண்ட, துயரமான, கொடூரமான வரலாற்று இடைவெளியின் பின்பு, மீண்டும் தமிழினத்தின் வீர எழுச்சிச் சின்னமாக, தமிழர் மண்ணிற் புலிக்கொடி பட்டொளிவீசிப் பறக்கிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் பெருமிதத்துடன் இன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்றுமில்லாதவாறு இன்று உலகமயமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் பாராமுகம் காட்டி வந்த உலகம் இன்று தனது முழுக் கவனத்தையும் எமது போராட்டத்தின் மீது திருப்பியுள்ளது. ஒரு பலம் வாய்ந்த விடுதலைப் போராட்ட சக்தியாக இன்று உலகரங்கில் நாம் முன்னணி வகித்து நிற்கின்றோம். தர்மத்தின் வழி தழுவி, ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த அளப்பரிய ஈகத்தின் ஆன்மீக சக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போகவில்லை. அது எமது இனத்தின் வீர விடுதலைக் குரலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கப்பால், ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள். வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும் அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி, உணர்வூட்டி ஒரே அணியில், ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்றுதிரள வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதார சக்தியாக விளங்குகின்றன.
எனது அன்பான மக்களே!
ங்கள தேசத்தில் இன்று அரசாங்கம் என்று கருதக்கூடிய ஓர் ஒழுங்கமைவான கட்டமைப்பு இயங்கவில்லை. அரச அதிகாரமானது, இரு பெரும் சிங்களக் கட்சிகளின் தலைமைகள் மத்தியிற் பிளவுபட்டுக் கிடக்கிறது. பாராளுமன்ற ஆட்சியும் சனாதிபதி ஆட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதும் நிலையில் உள்ளன. பாதுகாப்பு, உள்துறை, ஊடக அமைச்சுகளை சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி பீடம் அதிகார வலுவிழந்து முடங்கிக் கிடக்கிறது. இரு தலைவர்களுக்கும் மத்தியிலான இந்த அதிகார இழுபறியால் அரச கட்டுமானம் ஆட்டம் கண்டு உறுதிநிலை குலைந்துள்ளது. இந்த நெருக்கடி காரணமாகச் சமாதான முன்னெடுப்புகள் செயலிழந்து போயின. இந்தக் குழப்ப நிலையால் விரக்தியடைந்த நோர்வே அரசு தனது சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளது. தென்னிலங்கையில் திடீரென உருவாகியுள்ள இத்தகைய நிலைமைகள் காரணமாக அமைதிச் சூழ்நிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சமாதான வழியிலான பேச்சுக்கும் சமரசத் தீர்வுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந் நெருக்கடி நிலைமை தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சர்வதேச நாடுகளுக்கும் கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.
கொழும்பில், திடீரென இந்த அரசியற் பூகம்பம் ஏற்பட்டதன் காரணமென்ன? ஏற்கனவே இரு துருவங்களாக முரண்பட்டிருந்த அரச அதிகார மையத்தில் திடீரென விரிசல் விழுந்ததன் காரணமென்ன? போர் ஓய்வைப் பேணி அமைதியைக் காப்பதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பு, உள்துறை அமைச்சுகளைச் சந்திரிகா அம்மையார் திடீரெனப் பறித்துக்கொண்ட புறநிலைக் காரணி என்ன?
தனது தலையீட்டுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார் சந்திரிகா. ஒன்று, விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்திப் போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருவதால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது. அடுத்தது, ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் புலிகள் இயக்கத்திற்குப் பெரிய அளவிற் சலுகைகளை வழங்கி வருகிறது என்பதாகும். இந்த இரண்டு குற்றச் சாட்டுகளிலும் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் இங்கு திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகின்றேன். எமது விடுதலை இயக்கத்தைக் களங்கப்படுத்தும் குறிக்கோளுடனும் தற்போதைய சமாதானச் சூழ்நிலையைக் குழப்பிவிடும் நோக்கத்தோடும் கட்டவிழ்த்துவிடப்பட்ட புரளிகள் இவை.
எமது இயக்கமுஞ் சரி, மக்களுஞ் சரி போரை விரும்பவில்லை. வன்முறைப் பாதையை விரும்பவில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். சமாதான வழியில் எமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதையே விரும்புகின்றோம். சமாதான வழிமுறையில் நாம் ஆழமான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே அமைதி நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வண்ணம் போர் நிறுத்தத்தை நாம் இறுக்கமாகவும் உறுதியாகவும் பேணி வருகின்றோம். இப் போர் நிறுத்தத்தை எமது இயக்கமே முதலில் ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு நாம் அமைதி காத்து வருகின்றோம்.
நாம் பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போருக்கான ஆயத்தங்களைச் செய்து வருகின்றோமென சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது அபாண்டமான பொய்யாகும். அமைதி காக்கும் பணியில் நாம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோமே தவிர போருக்கான ஆயத்தங்கள் எதையும் செய்யவில்லை. எமது நிர்வாகக் கட்டமைப்புகளுக்கு ஆட்பலம் தேவை என்பதால் சிறிய அளவில் ஆட்சேர்ப்புச் செய்து வருகின்றோம் என்பது உண்மை. இதனைத் திரிவுபடுத்தி, பெரிதுபடுத்திப் போருக்கான முன்முயற்சியெனச் சிங்கள மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுகிறார் சந்திரிகா.
இப் போர்நிறுத்தத்தால் தமிழர் தாயகத்தில் முழுமையான அமைதி நிலை ஏற்படவில்லை. இயல்பு நிலையும் திரும்பவில்லை. அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளான அவல வாழ்க்கையே தொடர்கிறது. சிங்கள இராணுவம் போர் நிறுத்த விதிகளையும் கடப்பாடுகளையும் நிறைவு செய்ய மறுத்து வருகிறது. உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையிற் கணிசமான குடியிருப்பு நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்வதால், இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கும் வாழ்விடங்களுக்கும் திரும்ப முடியாது அவலப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் அடிக்கடி தலைதூக்கி வருகின்றன. இதனால் தமிழ்ப் பொதுமக்கள் சதா துன்பத்திற்கும் இம்சைக்கும் ஆளாகி வருகின்றனர். போருக்கு ஓய்வு ஏற்பட்ட போதும் எமது மக்களுக்கு இன்னும் ஓய்வு கிட்டவில்லை. முழுமையான அமைதியையும் இயல்பான வாழ்வையும் எமது மக்கள் இன்னும் அனுபவிக்க முடியவில்லை. அதேவேளை, போர் நிறுத்தத்தாற் சிங்கள தேசத்தில் முழுமையான அமைதியும் இயல்பு நிலையும் நிலவுகிறது. பொருளாதார வாழ்வும் மேம்பட்டு வருகிறது. போர் நிறுத்தத்தின் ஆக்கபூர்வமான பயன்களைச் சிங்கள தேசமே அனுபவித்து வருகிறது. ஆனால் தமிழர்களின் அவல நிலை தொடர்கிறது. இதுதான் இன்றைய யதார்த்த மெய்நிலை.
இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் போர்நிறுத்த காலத்தில், சந்திரிகா அம்மையார் குற்றம் சுமத்துவது போல, எமது இயக்கத்திற்குப் பெரும் சலுகைகள் வாரி வழங்கப்படவில்லை. மாறாக, இழப்புக்களையே நாம் சந்தித்திருக்கிறோம். போர்நிறுத்தக் காலத்தில் எமது இயக்கத்திற்குச் சொந்தமான இரு பெரும் வணிகக் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பிற் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டன. எமது மீன்பிடிப் படகுகளும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. இச் சம்பவங்களின் விளைவாக, மூத்த உறுப்பினர் பலர் உட்பட கடற்புலிப் போராளிகள் இருபத்தாறு பேரை நாம் இழந்தோம். பொறுமையின் எல்லைக்கு எம்மைத் தள்ளிய இந்த ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் சகித்துக் கொண்டு நாம் அமைதியைப் பேணி வந்தோமென்றால் அது சமாதானத்தில் எமக்குள்ள உறுதியையே எடுத்துக் காட்டுகிறது.
எமது விடுதலை இயக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கும் மத்தியிற் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், தாய்லாந்தில் ஆரம்பித்த பேச்சுக்களில் உருப்படியான, ஆக்கபூர்வமான முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. ஆறு மாத காலத்திற்குள் நிகழ்ந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் நிறைவேற்றப்படவில்லை. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் நிறுவப்பட்ட உப- குழுக்கள் செயலிழந்து போயின. அரசுடன் பேசி எமது மக்கள் எதிர்கொண்டு நின்ற பூதாகரமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நாம் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையைத் தோற்றுவிப்பது, இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது, போரால் அழிவுற்ற கட்டுமானங்களை மீளமைப்பது, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பது போன்ற எமது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவிட்டு, அரச தரப்பும் அனுசரணையாளர்களும் மனித விழுமியங்கள் பற்றியும் இறுதித் தீர்வுக்கான வழிமுறைகள், வரைபடங்கள் பற்றியுமே முக்கிய கவனம் செலுத்தினர். இதனாற் பேச்சுவார்த்தை, மக்களது பிரச்சினைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அப்பால் வேறு திசையில் நகர்ந்தது. இது இவ்வாறிருக்க, சமாதானப் பேச்சுக்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டி, உலக நாடுகளிலிருந்து உதவியையும் கடனையும் பெற்று, போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதிலேயே ரணிலின் அரசு அதீத அக்கறை காட்டியது. அத்துடன் உலக நாடுகள் சிலவற்றின் உதவியுடன் ஒரு சர்வதேசப் பாதுகாப்பு வலையத்தை நிறுவி விடவும் அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்பட்டது. ரணில் அரசின் இத் தந்திரோபாயம் காரணமாகச் சமாதான முயற்சியிலும் பேச்சுக்களிலும் உலக நாடுகள் பலவற்றின் அக்கறையும் தலையீடும் அதிகரித்தன. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய வரையறைக்குள் தீர்வுகாணப்படவேண்டும் என்பதையும் சில நாடுகள் வலியுறுத்திக் கூறின. இவ்விதம் சர்வதேசத் தலையீடுகள் அதிகரித்ததன் எதிர்மறை விளைவாகச் சமாதானப் பேச்சு மேலும் சிக்கலடைந்தது. இந்தச் சூழ்நிலையிற் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத நடுப் பகுதியில் எமது இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முக்கிய மாநாடு ஒன்று வாஷிங்டனிற் கூட்டப்பட்டது. பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பாகவும் சம பங்காளி என்ற தகைமையுடனும் பங்குபற்றி வந்த எமது இயக்கம் இவ்விதம் சிறுமைப்படுத்தப்பட்டமை எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தந்தது. இப்படியான நிலைமைகள் காரணமாகவே பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திவைத்துச் சமாதான வழிமுறையின் பல்வேறு பரிமாணங்களையும் மறு பரிசீலனை செய்ய நாம் தீர்மானித்தோம்.
தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பது என்பது உடனடியாக, குறுகிய காலத்திற் சாத்தியப்படப் போவதில்லை. அது நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் எமது மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினைகள் அவசரமானவை. நீண்ட காலத்திற்குப் பின்போட முடியாதவை. அத்தியாவசியமான மனிதாபிமானத் தேவைகள் ஒரு புறமும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் போன்ற பிரச்சினைகள் மறுபுறமுமாக எமது மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான, பாரிய இடர்களுக்கு உடனடியாகப் பரிகாரம் தேவை. இதுபற்றி ஆழமாகப் பரிசீலனை செய்து பார்த்தபொழுதுதான் வடகிழக்கில் ஓர் இடைக்கால அதிகார சபை நிறுவப்படுவது அவசியமென உணர்ந்தோம். போரினாற் பேரழிவுகளுக்கு இலக்காகி, ஆயுதப் படைகளின் ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி நிற்கும் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை தோற்றுவிக்கவும் இடம்பெயர்ந்தோரைக் குடியேற்றவும் புனர்நிர்மாண அபிவிருத்தி வேலைகளைச் செம்மையாகவும் துரிதமாகவும் நிறைவேற்றக் கூடிய செயற்றிறன்மிக்கதாக இந்த இடைக்கால ஆட்சியதிகார சபை அமைய வேண்டுமெனக் கருதினோம். இதன் அடிப்படையிற் கணிசமான அதிகாரங்களைக் கொண்டதான ஓர் இடைக்கால அரசியல் நிர்வாக ஆட்சியமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான ஒரு திட்ட வரைவை முன் வைக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஓர் உருப்படியான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தோம். கடந்த மே மாதம் 15ம் திகதி நோர்வே வெளிவிவகார அமைச்சர் திரு. பீட்டர்சன் அவர்களை நான் சந்தித்தபோதும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்ட ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இருபது ஆண்டு காலமாக நீடித்த போரினால் அழிந்து போன எமது தேசத்தையும் எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையையும் மீளக் கட்டியமைப்பதற்கு இத்தகையதொரு ஆட்சியமைப்புத் தேவையென்பதையும் விளக்கினேன்.
எமது கோரிக்கைக்கு இணங்க, இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாக, ஒன்றன் பின் ஒன்றாக, இரு திட்ட வரைவுகளை அரசாங்கம் எமக்கு அனுப்பி வைத்தது. இத் திட்ட வரைவுகளிற் குறிப்பிடப்பட்ட நிர்வாக சபை, நாம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக அமையவில்லை. அத்துடன் எமது இயக்கத்தின் பங்கும் தெளிவானதாக வரையறுக்கப்படவில்லை. மிகவும் குறுகிய அதிகாரங்களுடன் அபிவிருத்தி வேலைகளை மட்டும் கையாளும் ஒரு நிர்வாக அமைப்பையே இவ் வரைவுகள் பரிந்துரைத்தன. இதனால் இத் திட்ட வரைவுகளை ஏற்க முடியாதென நாம் நிராகரித்தோம். இதனையடுத்து, இடைக்கால நிர்வாகஞ் சம்பந்தமாகப் புதிய யோசனைகள் அடங்கிய மூன்றாவது வரைவு ஒன்றை அரசாங்கம் எமது பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இத் திட்டம் எமக்குத் திருப்தி அளிக்காதபோதும் நாம் அதனை நிராகரித்துவிடவில்லை.
எமது இயக்கம் எதிர்பார்த்தது போலவும் எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையிலும் ஒரு திட்டவட்டமான இடைக்கால ஆட்சியமைப்பை முன்வைக்க அரசாங்கம் தயங்குகின்றது என்பது எமக்குத் தெளிவாகியது. ஆயினும், ரணிலின் ஆட்சிபீடம் ஏதோ புதியபுதிய யோசனைகளை முன்வைக்க விடுதலைப் புலிகள் இயக்கம் அவற்றைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவது போன்ற ஒரு தப்பபிப்பிராயம் எழக்கூடுமென நினைத்தோம். ஆகவேதான், அரசாங்கத்தின் இறுதி வரைவை எடுத்த எடுப்பில் நிராகரிக்காமல், அதற்கு மாற்றுத் திட்டமாக எமது யோசனைகள் அடங்கிய ஒரு திண்ணியமான, உருப்படியான இடைக்கால ஆட்சியதிகாரக் கட்டமைப்பை வரைந்து; அதனை அரசாங்கத்திடம் கையளிக்க நாம் முடிவெடுத்தோம். எமது திட்ட வரைவைத் தயாரிக்கும் விடயத்தில் நாம் அவசரப்படவில்லை. கால அவகாசம் ஏற்பட்டாலும் நாம் முதன்முதலாக எழுத்தில் வரைந்து கொடுக்கும் திட்டம், ஒரு இடைக்கால ஒழுங்காக அமைந்தபோதும் அது செம்மையானதாக, புதுமையானதாக, நடைமுறைச் சாத்தியமானதாக இருக்க வேண்டுமென விரும்பினோம். அத்தோடு, பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எமது மக்களின் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்கும் வழிமுறைகளைக் கொண்டதாகவும் அது அமையவேண்டும் எனவும் எண்ணினோம். ஆகவேதான், எமது திட்ட வரைவைப் பரந்த அளவில், பல்வேறு மட்டங்களிற் பல்வேறு தரப்பினரதும் ஆலோசனையைப் பெற்றுத் தயாரித்தோம். பரந்துபட்ட ரீதியில் தமிழீழ மக்களையும் வெளிநாடுகளில் வதியும் எமது சட்ட, யாப்பு அறிஞர்களையும் சர்வதேச நிபுணர்களையும் கலந்தாலோசித்தே இத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டது.
அரசாங்கத்திடம் நாம் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம் பற்றி நான் இங்கு விபரமாக விளக்கிக் கூறுவது அவசியமில்லை. இத் திட்ட வரைவு ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக எல்லோரதும் பார்வைக்கும் ஆய்வுக்குமாக வெளியிடப்பட்டுள்ளது. எமது திட்ட யோசனைகள் பலரகமான சர்ச்சையையும் குழப்பத்தையும் கிளப்பியபோதும் சமாதானத் தீர்வை நோக்கி நாம் எடுத்த முயற்சியை உலக நாடுகள் பல வரவேற்றுள்ளன. எமது யோசனைகளை விபரமாகவும் தெளிவாகவும் முதற் தடவையாக எழுத்தில் முன்வைத்ததையும் சில வெளிநாடுகள் வரவேற்றுள்ளன. ரணிலின் அரசு எமது திட்ட வரைவை நிராகரிக்காது, அதன் அடிப்படையில் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்தது. அதே வேளை, எமது இடைக்கால நிர்வாக யோசனைகளுக்குச் சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. தனித் தமிழ் அரசுக்கு அத்திவாரமாக எமது திட்டம் அமைவதாகச் சிங்கள இனவாதக் கட்சிகளும் ஊடகங்களும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. இந்திய ஊடக உலகத்திலிருந்தும் இந்திய அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தும் இதேபோன்று கண்டன விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. எதிர்க் கட்சிகளின் சார்பாகத் திரு. கதிர்காமர் விடுத்த நீண்ட அறிக்கையில் எமது திட்ட வரைவைப் படுமோசமாக விமர்ச்சித்து, தனியரசு உருவாக்கத்திற்கான அம்சங்கள் அதிற் பொதிந்து இருப்பதால் இலங்கையின் இறைமைக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.
எமக்கு ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் கொடுத்த விடயம் என்னவென்றால் எமது இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவு வெளியான சில தினங்களிலேயே சந்திரிகா அம்மையார் திடீரென ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருந்த மூன்று முக்கிய அமைச்சுகளைப் பறித்தெடுத்தமையாகும். அவர் என்னதான் காரணங்களைக் கற்பித்தாலும் எமது திட்ட வரைவின் உடனடி எதிர்வினையாகவே இந்தப் பாரதூரமான நடவடிக்கையை எடுத்தார் என்பது இன்று உலகறிந்த உண்மையாகிவிட்டது. சந்திரிகாவி;ன் இத் திடீர்த் தலையீட்டினால் ரணிலின் ஆட்சிபீடம் அதிகாரமிழந்து முடங்கிக் கிடப்பது மட்டுமன்றி சமாதான வழிமுறைக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
எமது இயக்கம் முன்வைத்த இடைக்கால அதிகார சபை, தமிழீழத் தனியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகவும் தனியரசுக்கான படிக் கற்களைக் கொண்டிருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. நாம் தெரிவித்த யோசனைகள் எமது தேசியப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கான இறுதித் திட்டமன்று. எமது திட்ட வரைவு ஓர் இடைக்கால ஒழுங்கு பற்றியது. நாம் பரிந்துரைத்த நிர்வாக சபை கணிசமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதென்பது உண்மை. உருப்படியான நிர்வாக அதிகாரங்கள் இல்லாமற் போரினாற் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதும் சாத்தியமில்லை. அத்துடன் சட்டம் – ஒழுங்கு, நீதி நிர்வாகம், நிதி ஒதுக்கீடுகள், காணிப் பகிர்வுகள் போன்ற பிராந்திய நிர்வாகத்தையும் செம்மையாகச் செயற்படுத்த முடியாது. இங்கு இன்னொரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, வடகிழக்கிலுள்ள பெரும் பகுதி ஏற்கனவே எமது ஆட்சியதிகாரத்தின் கீழ் நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்ற யதார்த்த உண்மையையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வடகிழக்கில் இன்று நிலவும் கொடூரமான யதார்த்தப் புறநிலைகள், தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதப் படைகளின் அனர்த்தங்கள், இயல்புநிலை தோன்றாத அவல நிலை, எமது மக்கள் எதிர்கொள்ளும் அவசர மனிதாபிமானத் தேவைகள் மற்றும் பல வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் நீதியான, நியாயமான, உடனடியான பரிகாரம் காணும் நோக்குடனேயே ஓர் உருப்படியான திட்டமாக எமது யோசனைகளை முன் வைத்தோம். இத் திட்டத்தில் முற்போக்கான, புதுமையான, ஆக்கபூர்வமான அம்சங்கள் பலவுண்டு. வடகிழக்கிற் பெரும்பான்மையினராக வாழும் தமிழரும் மற்றும் முஸ்லிம், சிங்கள மக்களும் தமிழீழ மண்ணில் தமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை மேம்படுத்தும் வகையில் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமைகிறது. இந்தச் சுயாட்சிக்கான அம்சங்களை மிகைப்படுத்தி, அவற்றைத் தனியரசுக்கான திட்டமாகத் திரிபுபடுத்தி எமது சமாதான முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்தச் சில சக்திகள் முனைவது எமக்குக் கவலையைத் தருகிறது. இந்த இடைக்கால அதிகார சபைத் திட்டம் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு மாற்றீடாக, பேச்சுக்களுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டதாகும். நேர்மையுடனும், சமாதான வழிமுறையில் உறுதியான பற்றுடனும் நாம் மேற்கொண்ட இம் முன்முயற்சி தென்னிலங்கையில் ஓர் அரசியற் புயலைக் கிளப்பியிருக்கிறது. சிங்கள இனவாத சக்திகள் எமக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளன. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் மத்தியில் எழுந்த அதிகாரப் போட்டியால் அரச கட்டமைப்பே ஆட்டம் கண்டு நிற்கிறது. காலங்காலமாகத் தமிழருக்கு உரிமையை மறுத்துவரும் சிங்கள இனவாதத்தின் முகமூடி கிழிந்து விட்டதால் அதன் உண்மையான, அசிங்கமான முகத்தை உலகம் காணக்கூடியதாக இருக்கிறது.
முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.
தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.
சிங்களப் பேரினவாதத்தின் சிலந்தி வலைக்குட் சிக்கித் தமிழரின் வாழ்வும் வளமும் சிதைந்து போவதை நாம் இனியும் அனுமதிக்க முடியாது. வன்முறையைத் துறந்து, மென்முறைப் பாதையைத் தழுவி சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்புகளுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகின்றோம். இதனை உலக நாடுகளனைத்தும் நன்கறியும். ஆனால், சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து, ஒடுக்குமுறையைத் தொடருமானால் எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையின் கீழ் நாம் பிரிந்து சென்று தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இப்படியான இறுதி மார்க்கத்திற்குத் தமிழர்களைத் தள்ளிவிடும் புறநிலையை உருவாக்கிவிடவேண்டாமென நாம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி, இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்தவொரு சத்தியாலும் அசைத்துவிட முடியாது. இந்த உண்மையை இன்றைய புனித நாளில், தமிழீழத்திலும் உலகெங்கும் எமது தியாகிகளை நினைவுகூரும் இந் நன் நாளில், எமது இதயங்களிற் பதித்து, விடுதலை என்ற எமது சத்திய இலட்சியத்தில் நாம் உறுதிகொள்வோமாக.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்