வவுனியாவில் மாற்றுத்திறனாளியின் கடையில் கைக்குண்டு மீட்பு
வவுனியா - தோணிக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரினால் நடத்திச் செல்லப்படும் இலத்திரனியல் பொருட்கள் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வானொலி பெட்டியில் இருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய பொருட்களை சேகரிக்கும் ஒருவரிடம் இருந்து, குறித்த கடை உரிமையாளர், குறித்த வானொலி பெட்டியை கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வானொலி பெட்டியை திருத்துவதற்கு முற்பட்ட போதே அதற்குள் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர் கடந்த 3 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் தான் கொள்வனவு செய்த வானொலி பெட்டியை திருத்துவதற்கு முற்பட்டபோது, அதனுள் கடதாசி ஒன்றினால் சுற்றப்பட்டு, கைக்குண்டொன்று இருப்பதை மகிந்தன் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் தனது கடையில் இருந்து வெளியேறியதோடு, இதுதொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, மற்றைய வானொலியிலும் கைக்குண்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள மகிந்தன், கைக்குண்டு ஆபத்தான நிலையில் பசைத்தாளால் ஒட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.