வடமாகாணம் முற்றாக முடங்கியது
யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் பூரண ஹர்தால் அனுட்டிக்கப்படுகின்றது.
பூரண ஹர்த்தால் காரணமாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
தனியார் மற்றும் அரச பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து கடைகள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ள நிலையில், யாழ் நகரப் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் பல்கலைகழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து, வட மாகாணத்தில் இன்றைய தினம் பூரண ஹர்தாலை அனுட்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இந்த அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.