அழுத்தங்கள் தேவையில்லையா -ரொபட் அன்டனி
அழுத்தங்களை பிரயோகிப் பதனூடாகவே
உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது யதார்த்தம். அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது எந்தளவு தூரம் சவாலான மற்றும் விட்டுக் கொடுப்புடன் கூடிய செயற்பாடு என்பதை அரசாங்கமும் தென்னிலங்கையும் புரிந்து கொள்வதற்கும் இந்த அழுத்தங்கள் முக்கியமான தேவையாகும்.
வடக்கில் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கும் நிலைமைகள் தலைதூக்கி வருகின்ற சூழலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றமை தொடர்பில் தென்னிலங்கை சிந்தித்து கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பின் தாற்பரியத்தை உணர்ந்து விரைவாக ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை வழங்குவதற்கு முன்வர வேண்டும்
ஒரு நிறுவனத்திலோ அல்லது ஒரு அமைப்பிலோ ஏதாவது ஒரு நியாயமான விடயத்தை சாதித்துக் கொள்ள வேண்டுமானால் குறிப்பிடத்தக்க வகையில் அழுத்தங்களைப் பிரயோகிப்பது அவசியமாகின்றது. இல்லாவிடின் வெறுமனே அதனை தாங்கள் இதனைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அந்தக் கோரிக்கையில் ஒருவீரியம் இருக்காது என்பதே யதார்த்தமாகும்.
மாறாக நிறுவனத்திற்குள்ளோ அமைப்புக்குள்ளோ இருந்து கொண்டே ஒரு விதத்தில் அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதேநேரம் இராஜதந்திர ரீதியிலும் சில அணுகுமுறைகளை மேற்கொள்வதுடன் ஒருவிதமான அழுத்தங்களை பிரயோகிப்பதனூடாகவே தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதானது தற்போதைய நிலைமையில் எந்தவொரு விடயத்தை எடுத்து பார்த்தாலும் அது அவசியமானதாகவே கருதப்படுகின்றது. அதனால் எந்தவொரு தரப்பாவது தமது உரிமைகளுக்காக அழுத்தங்களை பிரயோகிப்பதை தவறு என்று யாரும் கூற முடியாது.
அதேநேரம் உரிமைகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் தரப்புக்களும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை நாடி பிடித்தறிந்து இராஜதந்திர ரீதியில் செயற்பாடுகளை மேற்கொள்வதும் அவசியமானதாகும். அனைத்து விடயங்களையும் குழப்பிவிடும் அழுத்தங்களும் அவ்வளவு நல்லதல்ல என்பதனையும் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த செயற்பாட்டில் சமநிலைப் பேணப்படவேண்டியது அவசியமாகும். அதாவது தமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் இராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொள்வது எந்தளவு தூரம் அவசியமோ அதே அளவு அழுத்தங்களை பிரயோகிப்பதும் அவசியமானதாக காணப்படுகின்றது. தற்போது வடக்கில் எழுந்துள்ள புதுவிதமான அரசியல் சூழலும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றது.
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் போராட்டமானது தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டில் புதிய அரசாங்கம் உருவாகி சிறுபான்மை மக்களுக்கான தீர்வு ஒன்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கனிந்து வருகின்ற நிலைமையில் இவ்வாறு வடக்கில் எழுக தமிழ் போன்ற செயற்பாடு இடம்பெறுவது நல்லிணக்கத்தை குழப்பி விடும் என்று விமர்சிக்கப்படுகின்றது.
தென்னிலங்கையில் கடும் போக்கு வாதிகளும் விக்கினேஸ்வரனின் இந்த அரசியல் போக்கை கடுமையாக விமர்சித்து வருவதுடன் மிதவாதப் போக்குடையவர்கள் என கருதப்படுகின்ற பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இந்த செயற்பாட்டை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதுமட்டுமன்றி தென்னிலங்கையில் சில இடங்களில் விக்கினேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பார்க்கும்போது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியானது பாரிய சர்ச்சையை தோற்று வித்துள்ளது. குறிப்பாக விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியிருக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற வேறுசில கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தன.
வடக்கு முதலமைச்சர் தலைமையிலான எழுக தமிழ் பேரணி இவ்வாறான பாரிய விமர்சனம் மற்றும் சர்ச்சைக்குரிய நிலைமைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ள நிலையில் அதன் யதார்த்தம் மற்றும் கள நிலைமைகள் குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அந்தநேரம் ஒரு சில விமர்சனங்களுக்கு மத்தியில் மிகவும் முற்போக்கான இடத்திற்கு வந்து விக்கினேஸ்வரன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்ததை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தளவு தூரம் விட்டுக்கொடுப்புக்கு அவர் வந்திருந்தார்.
அதனையடுத்து வட மாகாண சபைக்கும் அப்போதைய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் பாரிய விரிசல் நிலைமை காணப்பட்டது. இவ்வாறு முரண்பாடுகள் முன்னேற்றமடைந்துகொண்டிருந்தபோது வடமாகாண சபையானது அவ்வப்போது பல்வேறு பிரேரணைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் எதிர்பாராத விதமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கி வருகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்க்காத போக்கை கொண்டு வருகின்றது.
குறிப்பாக தற்போதைய ஆட்சியில் தீர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய நம்பிக்கை உள்ளதால் இவ்வாறு சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது இராஜதந்திர ரீதியில் ஒரு பொருத்தமான விடயமாக கருதப்படுகின்றது. அதாவது அரசாங்கத்துடன் குறிப்பிட்டளவு தூரம் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் வெற்றியை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருகின்ற அதேநேரம் வடக்கில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளும் ஏக காலத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே விக்கினேஸ்வரன் நல்லிணக்கத்தை குழப்புவதாக விமர்சனங்கள் இடம்பெற்று வருகின்றன.
உண்மையில் இவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பதை தென்னிலங்கை தவறு என்று கருதலாமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. காரணம் மத்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடனும் சாணக்கியமாகவும் செயற்பட்டு வந்தாலும் தமிழ் மக்கள் கோருகின்ற மற்றும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தீர்வுத் திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?. அதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. ?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் பேசும் மக்களுக்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்று கருதினாலும் அதற்கு தென்னிலங்கையின் இனவாத சக்திகள் இடமளிக்குமா என்பது உத்தரவாதமற்ற ஒரு விடயமாகும்.
காரணம் கடந்த காலங்களில் அரசியல் தீர்வு விடயங்களில் இடம்பெற்ற அனைத்து முயற்சிகளிலும் தமிழ் பேசும் தரப்புக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியே வந்துள்ளன. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ஆளும் கட்சிக்கும் கூட்டமைப்புக்கு மிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒரு கட்டத்தில் ஆளும் தரப்பு எந்த அறிவித்தலும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வராமல் விட்டிருந்தது.
இவ்வாறு வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்ட பதிவுகளே காணப்படுகின்றன. அதனால்தான் ஒரு கட்டத்தில் தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வநாயகம் கூறியிருந்தார். மேலும் தீர்வு விடயத்தில் தொடர்ச்சியாக தமிழ்த் தரப்பு ஏமாற்றங்களை சந்தித்து வந்ததன் காரணமாகவே 1977 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டை தீர்மானமும் கொண்டு வரும் நிலைக்கு தமிழர் தரப்பு தள்ளப்பட்டது.
வரலாறு எமக்கு பல பாடங்களை கற்பித்துள்ளது. எனவே வரலாற்றின் பாடங்களுக்கு அமைய தமிழர் தரப்பு காய்களை நகர்த்த வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் தமிழர் தரப்பு தமது உரிமைகளை வலியுறுத்தி பேரணிகள் மூலம் அழுத்தங்களை முன்னெடுப்பதை தென்னி்லங்கை தவறு என்று கூற முடியாது.
காரணம் அழுத்தங்களை பிரயோகிப்பதனூடாகவே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது யதார்த்தமாகும். அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுவது எந்தளவு தூரம் சவாலான மற்றும் விட்டுக் கொடுப்புடன் கூடிய செயற்பாடு என்பதை அரசாங்கமும் தொன்னிலங்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் இவ்வாறு அழுத்தம் பிரயோகிக்கும் நிலைமைகள் தலைதூக்கி வருகின்ற சூழலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றமை தொடர்பிலும் தென்னிலங்கை சிந்தித்து கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பின் தாற்பரியத்தை உணர்ந்து விரைவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
அதனைவிடுத்து வடக்கில் தமிழ்த்தரப்பு பிரயோகிக்கும் அழுத்தங்களை இனவாத ரீதியில் நோக்குவது சரியானதல்ல. யதார்த்த நிலைமையை அரசாங்கமும் தென்னிலங்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது இவ்வாறு இருக்க வடமாகாண சபை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் பொறுப்புடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இந்த விடயத்தில் வடமாகாண சபையானது மேலும் செயற்திறனுடன் செயற்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் நியாயமானது. ஆனால் அதற்காக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பது தவறு என்று அனைத்துத் தரப்பினரும் கூற முற்படுவது சரியா என்ற கேள்வி எழுகின்றது.
தற்போதைய நிலைமையில் அரசாங்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடனும் இராஜதந்திர ரீதியிலும் செயற்படுவது எந்தளவு தூரம் முக்கியமோ அதே அளவு தமிழர் தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும் அவசியமாகும். அதனூடாகவே கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்பின் ஆழத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இனவாத சக்திகள் நல்லிணக்கத்தை குழப்பிவிடும் வகையில் இந்த அழுத்தங்களை பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது. இந்த விடயத்தில் அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
தென்னிலங்கையைப் பொறுத்தவரையில முதலில் சமஷ்டி தீர்வு முறைமை கொண்டுவரப்பட வேண்டும் என பண்டாரநாயக்கவே யோசனை முன்வைத்திருந்தார். ஆனால் அதே பண்டாரநாயக்க பின்னர் அதனை நிராகரித்திருந்தார். அதுமட்டுமன்றி தற்போது தென்னிலங்கையில் சமஷ்டி என்றாலே பாவமான ஒரு சொல்லாக கருதப்படுகின்றது. இதுதான் உண்மை நிலையாகும்.
எனவே, அழுத்தங்களை பிரயோகிக்காமல் தென்னிலங்கயிலிருந்து எதையாவது பெற்றுக் கொள்ள முடியும் என கருத முடியாது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது போன்று உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமாகும். அந்த அழுத்தங்கள் பல்வேறு வழிகளில் பிரயோகிக்கப்படலாம். இராஜதந்திர அணுகுமுறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக இவற்றை செய்யலாம்.
அந்த வகையில் உரிமைகளை வலியுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை விமர்சிப்பதை விடுத்து தமிழ் மக்களின் நியாய பூர்வமான பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றிக்கு உரிய தீர்வை முன்வைக்க வேண்டியது தென்னிலங்கையினதும் மத்திய அரசாங்கத்தினதும் கடமையாகும்.
இதேவேளை வடமாகாண சபையும் தொடர்ச்சியாக இவ்வாறு எதிர்ப்பு போக்கை கையாண்டு கொண்டிருக்காமல் மாகாண மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்கள் வாழ்வாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே அந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு வடமாகாண சபை முன்வர வேண்டும். ஏற்கனவே வடமாகாண சபை உரிய முறையில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் வடமாகாண சபை ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி மக்களுக்கான சேவையை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் சமயோசிதமாக செயற்படுவதும் மறுபுறம் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதும் முக்கியத்துவமிக்கவையாகும். இரண்டு விடயங்களும் சமநிலையில் முன்செல்ல வேண்டும்.
இந்த விடயத்தில் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் மற்றும் அநீதிகளை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கத்திடம் இருந்து அவ்வளவு இலகுவாக பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது.
காரணம் தென்னிலங்கை கடும் போக்குவாதிகள் இந்த விடயத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். எனவே இந்த விடயத்தில் இராஜதந்திர அணுகுமுறையும் அழுத்தங்களுடன் கூடிய அணுகுமுறையும் அவசியமாகும்.
எவ்வாறெனினும் தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்தளவு தூரம் சவாலான நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியதும் அவசியமாகும்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்