Breaking News

தமிழின் அருமை: கனடா தந்தது பெருமை

டொரண்டோ: தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும், கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்துள்ளது.கனடாவில் எம்பியாக இருக்கும் தமிழர் கேரி ஆனந்த சங்கரி, தமிழ் மொழியின் செழுமையை அங்கீகரிக்கும் விதமாகவும், கனடாவுக்கு தமிழர்கள் ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாகவும், ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி ஒரு தீர்மானத்தை கனடா பார்லிமென்டில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொண்டு வந்தார்.


இத்தீர்மானத்தின் மீது மே 20 மற்றும் செப்டம்பர் 29ம் தேதியும் விவாதம் நடந்தது. மோஷன் எம்-24 என அழைக்கப்படும் இத்தீர்மானம் அக்.5ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த கேரி ஆனந்த சங்கரி, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம். தமிழ் பண்பாடு, தமிழ் கலாசாரம், தமிழின் பழமை, தமிழின் செழுமை, கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகள் ஆகியவற்றுக்கான அங்கீகாரம் என்றார்.

இதே போன்ற தீர்மானம் ஏற்கனவே கனடா நாட்டின் மிசிசவுகா, துராம், ஒட்டாவா, டொரண்டோ, மார்க்கம், அஜாக்ஸ், பிக்கரிங் ஆகிய நகர்மன்றங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் தான் தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தான், ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக தேர்வு செய்துள்ளனர்.