வடக்கு முதல்வரை கண்டு அஞ்சுகிறாதா அரசாங்கம்?
கூட்டு எதிர்கட்சிக்கு எதிராக செயற்படும் அரசாங்கம், வடக்கு முதலமைச்சருக்கு எதிராக வாயை திறப்பதே இல்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், வடக்கில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் விக்னேஸ்வரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காத நல்லாட்சி அரசாங்கம், கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைகளுக்கும் கூட்டங்களுக்கும் மாத்திரம் தடை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் மக்கள் எம்முடன் இருக்கின்றனர் என்பதை அரசாங்கம் மறந்து விட கூடாது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசிய கட்சி புறக்கணித்து வருகின்றது. எனவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.