Breaking News

ஐனாதிபதியின் மறுபக்கம் - செல்­வ­ரட்னம் சிறி­தரன்


நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் பிள­வுகள் ஏற்­பட்­டு­விட்­டதோ
......., அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றதோ...... என்ற ஐயப்­பா­டுகள் இப்­போது பர­வ­லாக எழுந்­துள்­ளன.


புல­னாய்வு பொலிஸ் பிரி­வினர் -(சி.ஐ.டி), நிதி குற்­ற­வியல் விசா­ரணை பிரி­வினர் (எவ்­.சி­.ஐ.டி) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்­கு­ழு­வினர் மீது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஜனா­தி­பதி என்ற ரீதியில் வெளி­யிட்­டுள்ள அதி­ருப்­தியே இதற்குக் கார­ண­மாகும்.

முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தாபாய ராஜ­பக்ஷ, முன்னாள் கடற்­ப­டைத்­த­ள­ப­திகள், இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் ஆகி­யோரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­வ­தையும் அவர்­களை நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­தையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடுந் தொனியில் கண்­டித்­தி­ருக்­கின்றார்.

இந்த விசா­ர­ணை­யா­ளர்கள் அர­சியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழேயே தமது விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தாக அவர் பகி­ரங்­க­மாகக் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார். இந்த வகையில் செயற்­பட்டால் கடும் தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் அவர் எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கின்றார்.

முன்­னைய ஆட்­சியில் ஜன­நா­யக முறைப்­படி சுதந்­தி­ர­மாக இயங்க வேண்­டிய ஆணைக்­கு­ழுக்கள் செயற்­பட முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. மனித உரி­மைகள், நீதித்­துறை, பொலிஸ், தேர்தல் உள்­ளிட்ட முக்­கிய துறை­களில் தனித்­த­னி­யான ஆணைக்­கு­ழுக்­களின் பொறுப்பில் செயற்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சியம் என்று பலரும் உணர்ந்­தி­ருந்­தார்கள்.

ஜன­நா­ய­கத்தின் அடிப்­படைத் தன்­மை­களை உறுதி செய்­வ­தற்கும் ஜன­நா­யக ரீதியில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கும் இது அத்­தி­யா­வ­சி­ய­மாகும் என்­பதும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

புதிய ஆட்சி – நல்­லாட்சி நாட்டில் மலர்ந்­ததும், இத்­த­கைய ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. அவற்றில் முக்­கி­ய­மாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்­கு­ழுவும் நிதி­மோ­சடி விசா­ரணைப் பிரிவும் அதி­முக்­கிய தேவை குறித்து அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டன.

முன்­னைய ஆட்­சியில் பெரும் இலஞ்ச ஊழல் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருந்­த­தாகப் பல்­வே­று­பட்ட முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஊழல் நட­வ­டிக்­கை­க­ளையும் இலஞ்ச ஊழ­லையும் இல்­லா­தொ­ழிக்க வேண்­டிய தேவை எழுந்­தி­ருந்­தது. எங்கு பார்த்­தாலும் ஊழல் எதிலும் ஊழல் என்ற வகையில் நிலை­மைகள் இருந்­த­தாகப் பர­வ­லாகக் குற்றச் சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. இதன் கார­ண­மா­கவே, ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான முன்­னணி என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த முன்­னணி, அர­சாங்­கத்தின் பல துறை­க­ளிலும் இடம்­பெற்று வந்த ஊழல் மோச­டிகள் தொடர்­பான தக­வல்­களைத் திரட்டி, அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என கோரி வந்­தது. ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும் என குரல் எழுப்பி அது போராட்டம் நடத்தி வந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றதைத் தொடர்ந்து நிதி குற்­ற­வியல் விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வி­ன­ருக்கும் இந்த ஊழல் மோச­டிகள் தொடர்­பான பல தக­வல்­களை வழங்கி அவற்றின் அடிப்­ப­டையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான முன்­னணி பேரு­தவி புரிந்து வந்­துள்­ளது.

இந்த நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சீற்­றத்­துடன் வெளி­யிட்­டுள்ள கருத்­துக்­க­ளை­ய­டுத்து, ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான முன்­னணி பெரும் அதிர்ச்சிய­டைந்­துள்­ளது. அந்த முன்­ன­ணியின் ஆலோ­ச­கரும் முக்­கி­யஸ்­த­ரு­மா­கிய கீர்த்தி தென்­னக்கோன் இதனை வெளிப்­ப­டை­யாகத் தெரி­வித்­துள்ளார்.

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான முன்­னணி உள்­ளிட்ட நாற்­ப­துக்கும் மேற்­பட்ட பொது அமைப்­புக்கள் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்­பவும், நாட்டில் நல்­லாட்சி மலர்­வ­தற்கும் பெரும் பங்­க­ளிப்பு செய்­தி­ருந்­தன. குறிப்பாக மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய ஜனா­தி­ப­தி­யாக வெற்­றி­பெ­று­வ­தற்­காக இந்த அமைப்­புக்கள் உழைத்­தி­ருந்­தன.

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்று 16 மாதங்­களின் பின்னர், ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களை ஏன் விசா­ரணை செய்­தீர்கள்? அவர்­களை ஏன் நீதி­மன்­றத்தில் நிறுத்­தி­னீர்கள் என்ற தோர­ணையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருந்து வெளிப்­பட்­டுள்ள கருத்­துக்கள் இந்தப் பொது அமைப்­புக்­களை சீற்றம் கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றன.

அர­சியல் பிளவின் அடை­யா­ளமா?

புல­னாய்வு பொலிஸ் பிரி­வினர், நிதி குற்­ற­வியல் விசா­ரணை பிரி­வினர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வி­னரின் நட­வ­டிக்­கைகள் அர­சியல் நிகழ்ச்சி நிரல் சார்ந்­தது என்­பதே ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்­டாகும்.

இரா­ணு­வத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என அவர் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, விட­யங்­களை விவா­திப்­ப­வர்­க­ளி­னா­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருப்­பது போன்று விசா­ரணை நட­வ­டிக்கை அர­சியல் சார்ந்­த­தாக இருந்தால், அதன் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார் என்­பதை ஜனா­தி­பதி வெளி­யிட வேண்டும் என்று ஜே.வி­.பி.­யினர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

ஊழ­லுக்கு எதி­ரான விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆத­ர­வா­ளர்கள் என்ற கார­ண­மா­கத்தான் அவர்கள் குறிப்­பாக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தாபாய ராஜ­பக்­சவை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி, நீதி­மன்­றத்­திற்கு இழுத்­தி­ருந்­தனர் என்ற கருத்து வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே, இதன் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்­டுள்ள அதி­ருப்­தியும் சீற்ற உணர்வும் உண்­மை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நோக்­கி­ய­தாகும் என்று அர­சியல் ஆய்­வா­ளர்கள் மத்­தியில் ஒரு கருத்து நில­வு­கின்­றது.

மகிந்த ராஜ­பக்க்ஷ அணி­யி­னரை அர­சியல் ரீதி­யாகப் பிள­வு­ப­டுத்தும் வகையில், முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தாபாய ராஜ­பக்­ ஷவைத் தன்­பக்கம் இழுப்­ப­தற்­கா­கவே, அவர் மீதான ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களில் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோபா­வேசம் கொண்டு கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார் என்று இதனை வேறு ஒரு கோணத்தில் இருந்து நோக்­கு­ப­வர்கள் கரு­து­கின்­றார்கள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே, மஹிந்த ராஜ­பக்­ஷவின் பின்னால் அணி­சேர்ந்­த­வர்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான செயற்­பா­டு­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். அவர்கள் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை ஒரே கட்­சி­யாகக் கொண்டு நடத்­து­வ­தற்கும் அதே போன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரா­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்த நல்­லாட்­சியைக் கொண்டு நடத்­து­வ­தற்கும் எதி­ரான நிலைப்­பாட்டில் தொடர்ந்து செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

இந்த நிலை­மையை முறி­ய­டிப்­ப­தற்­கான ஒரு காய் நகர்த்­த­லா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான விசா­ரணை நட­வ­­டிக்­கைகள் குறித்து திடீ­ரென ஒரு பகி­ரங்க மேடையில் சீறிப் பாய்ந்­துள்ளார் என அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள்.

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தரப்பில் இருந்து ஜனா­தி­ப­தியின் கடு­மை­யான கருத்­துக்­க­ளுக்கு பதில் உணர்­வுகள் உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆயினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பைச் சேர்ந்­த­வர்கள், அவ­ருக்கு ஆத­ர­வா­ன­வர்கள் என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற ஒரு தரப்­பினர் மீது, அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழேயே செயற்­ப­டு­கின்­றார்கள் என்று குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருப்­பதை ஒரு சாதா­ரண விட­ய­மாகக் கொள்ள முடி­யாது.

நேர­டி­யா­னதோர் அர­சியல் மோதலைத் தவிர்த்­துக் ­கொள்­வ­தற்­கா­கவே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்குப் பின்னால் இருப்­ப­வர்கள் அல்­லது இருப்­பவர் யார் என்­பதை வெளி­யி­டாமல் கருத்­து­ரைத்­தி­ருக்­கின்றார் என்று ஒரு சாரார் கரு­து­கின்­றனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்­துக்கள் குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அல்­லது ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் இருந்து, கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டும்­போ­துதான் இது உண்­மை­யி­லேயே ஓர் அர­சியல் பிளவின் அடை­யா­ளமா? இல்­லையா? என்­பது தெரிய வரும்.

சந்­தே­கங்­களும் கேள்­வி­களும்

ஊழல் மோச­டி­க­ளுக்கு இட­மில்லை. ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட வேண்டும். நல்­லாட்சி நடத்­தப்­பட வேண்டும் என்ற நல்ல நோக்­கங்­களை முன்­னி­றுத்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஊழல் மோச­டி­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில், சட்ட ரீதி­யான செயற்­பா­டு­களில் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தாபாய ராஜ­பக்­ ஷ, முன்னாள் கடற்­ப­டைத்­த­ள­ப­திகள், மற்றும் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களை உட்­ப­டுத்­தி­ய­மைக்­காக சீற்றம் கொண்­டி­ருப்­பது, அவ­ரு­டைய தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் நோக்­கங்கள் குறித்து சந்­தேகம் கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல், ஏன் இந்த நிலைமை என்ற கேள்­வி­யையும் எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

மிதக்கும் ஆயுதக் களஞ்­சியம் என்று வர்­ணிக்­கப்­பட்ட கப்­பலில் இருந்து கைப்­பற்­றப்­பட்ட பெருந்­தொ­கை­யான ஆயு­தங்கள் தொடர்பில் எவன்கார்ட் பாது­காப்பு நிறு­வ­னத்­தினால் அர­சாங்­கத்­திற்குப் பெரு­ம­ளவில் நட்டம் ஏற்­பட்­டி­ருந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இந்த எவன்கார்ட் நிறு­வ­னத்­துடன் சம்­பந்­தப்­பட்ட நிலைமை கார­ண­மா­கவே முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தாபாய ராஜ­பக்­ ஷவும், முன்னாள் கடற்­ப­டைத்­த­ள­ப­தி­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்கள்.

எவன்கார்ட் நிறு­வ­னத்தின் ஊழல் மோசடி தொடர்­பான உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மாகும். அதற்­கா­கவே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதில் யுத்­தத்தில் வெற்­றி­கொள்­வ­தற்­காக உழைத்த படைத்­த­ள­ப­திகள் மற்றும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பதவி வகித்­த­வர்கள் விசா­ரணை செய்­யப்­ப­டு­வதில் எந்­த­விதத் தவறும் கிடை­யாது என ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான முன்­ன­ணியைச் சேர்ந்த கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்­துள்ளார்.

இந்த முக்­கி­யஸ்­தர்­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வதும், அவர்­களை நீதி­மன்­றத்­திற்கு இழுத்­தி­ருப்­பதும் தேசிய பாது­காப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்றும், யுத்­தத்தை வெற்றி கொண்­ட­வர்­களை எவ்­வாறு நடத்­து­வது என்று சம்­பந்­தப்­பட்ட விசா­ர­ணை­யா­ளர்கள் புரிந்­தி­ருக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

இது­பற்றி குறிப்­பிட்­டுள்ள கீர்த்தி தென்­னக்கோன், படைத்­த­ள­ப­திகள் யுத்­தத்தில் வெற்­றி­பெ­று­வ­தற்கு முக்­கிய பங்­காற்­றினர் என்­பதில் எந்­த­வித மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. ஆயினும் அவர்கள் நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு முர­ணாகச் செயற்­பட்­டி­ருந்தால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. அதனை எவரும் விமர்­சிக்க முடி­யாது என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

நிதி ­மோ­சடி விசா­ரணைப் பிரி­வினர், தமக்­கு­ரிய சட்ட வரை­ய­றை­க­ளுக்கு அமை­யவே தமது நட­வ­டிக்­கை­களை மேற்கொண்­டுள்­ளனர் என்­பது எனது நம்­பிக்கை என்றும் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்­துள்ளார்.

ஊழல்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளுக்­காக படைத் தரப்­பினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது ஒரு புற­மி­ருக்க, இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரிகள் சிலர் பதி­னாறு மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள வழக்கு பற்­றியும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

'குற்றம் இடம்­பெற்­றி­ருப்பின் வழக்குத் தாக்கல் செய்­யுங்கள். இல்­லை­யெனில் அவர்­களை விடு­தலை செய்­யுங்கள். வழக்கைத் தொடர்­வ­தற்கு குற்றம் ஒன்று இருப்­பது தெரி­ய­வந்­தி­ருந்தால், அவர்­க­ளுக்குப் பிணை வழங்கி வழக்கைத் தொட­ருங்கள். விடு­தலை செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல், பிணை வழங்­குதல் போன்­றவை தர்­மத்­துக்கு உட்­பட்ட விட­யங்­களே. அவை அடிப்­படை மனித உரி­மை­க­ளாகும். அவை நாட்டு மக்­க­ளுக்கு இருக்க வேண்­டிய சுதந்­தி­ர­மாகும்' என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்­கத்­துடன் இணங்கி செயற்­பட்டு வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய எம்.ஏ.சுமந்­திரன் இது குறித்து கருத்து வெளி­யி­டு­கையில் பதி­னாறு மாதங்கள் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் சிறை வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறும் ஜனா­தி­பதி, பதி­னாறு வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் அர­சியல் கைதிகள் சிறையில் வாடு­வதைப் பற்றி ஏன் சிந்­திக்­க­வில்லை என வின­வி­யுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் கூற்று தவ­றா­னது. சட்டம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஒரு சட்டம். பொது­மக்­க­ளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடி­யாது. தமிழ் அர­சியல் கைதி­களை கடந்த நவம்பர் மாதம் விடு­விப்­ப­தாக தெரிவித்­தார்கள். ஆனால், இன்னும் அவர்கள் முழு­மை­யாக விடு­வித்து முடிக்­கப்­ப­ட­வில்லை என அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததும் பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் நன்­மை­களைச் செய்யும். அதற்கு அவர்­க­ளுக்கு அவ­காசம் தேவை. அதற்­காகப் பொறுமை காக்க வேண்டும். பொறுப்­போடு நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை மக்­க­ளுக்குக் கூறி அவர்­களை வழி­ந­டத்தி வந்­தது.

ஆனால், ஜனா­தி­ப­தியின் அண்­மைய உரை நல்­லாட்சி அர­சாங்கம் நன்­மையைச் செய்­கின்ற வழி­மு­றை­யில்தான் இன்னும் பய­ணிக்­கின்­றதா என்ற கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது.

இரா­ணு­வத்­துக்கு ஒரு சட்டம். மற்­ற­வர்­க­ளுக்கு ஒரு சட்டம் என்ற போக்­கில்தான் அர­சாங்கம் பய­ணிக்கப் போகின்­றதா என்ற கோள்­வியும் எழுந்­துள்­ளது.

முன்­னைய அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யி­ருந்­தது. நல்லாட்சி அரசாங்கம் அத்தகைய போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. ஆனால், இப்போது ஊழல் மோசடிகள் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணை செய்யப்படுவது குறித்து ஜனாதிபதியிடம் இருந்து வெளிப்பட்டுள்ள கருத்துக்கள் இந்த அரசாங்கமும் முன்னைய அரசின் போக்கிலேயே செயற்படப் போகின்றதோ என்ற அச்சப்பாட்டைத் தோற்றுவித்திருக்கின்றன.

மறுபுறத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற ஓர் அரசியல் பிளவின் அடையாளமாக நோக்குபவர்கள் மத்தியில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு என்ன நடக்கும் என்பது குறித்து கவலையடையத் தொடங்கியிருக்கின்றார்கள்.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அமைத்த நல்லாட்சியை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு முதலில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. பின்னர், இந்த நல்லாட்சி தனக்குரிய ஆட்சிக்காலம் முழுதும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் என தெரிவித்த அரச தரப்பினர், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டியிருந்தார்கள்.

ஆனால், அரசியல் ரீதியாக உணர்ச்சிவசப்படாதவர், நிதானமாகச் செயற்படுபவர் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதியுணர்வு நிலையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவரின் உள்ளே இருக்கின்ற மற்றுமொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எது எப்படி இருந்த போதிலும், நாட்டு மக்களும், ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நம்பியிருப்பவர்களும் நம்பிக்கை இழந்து, குழப்பமடையத் தக்க வகையில் அரச தரப்பினர் செயற்படுவது நல்லதல்ல. மக்கள் குழப்பமடைவதும், சந்தேகங்களுக்கு உள்ளாவதும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்