Breaking News

730 ரூபாய் வேண்டாம்; 11 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்



பெருந்தோட்டப் பகுதிகளில் 730 ரூபாய் வேண்டாம் ஆயிரம் ரூபாவும் 6 நாள் வேலையும் தமக்கு வேண்டும் எனக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் 11 ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொட்டகலை கிருஸ்லஸ்பாம் மொர்ஷல் சந்தியில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த தோட்ட தொழிலாளர்கள் தமக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் தற்பொழுது வழங்கி வரும் தொழிற்சங்க சந்தாவை நிறுத்தி விடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கபாடின்றி முடிவடைந்த நிலையில், பேச்சுவார்த்தையின் ஊடாக 730 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெருந் தோட்டங்களில் 11 ஆவது நாளாகவும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் ஆறு நாள் தொழிலும் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு எட்டும் பட்சத்திலே தாம் போராட்டத்தை கைவிடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, கொட்டகலை டிரேட்டன் தோட்டம் மற்றும் நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்திற்கு முன்பாகவும் இன்று காலை போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் 730 ரூபாய் வேண்டாம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் ஆறு நாள் வேலை வேண்டும் என்றும் பறை அடித்து, ஒப்பாரி மூலம் குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் ஹட்டன் எரோல் தோட்ட தொழிலாளர்கள், நோர்வூட் அயரபி மற்றும் பொகவந்தலாவ, பதுளை கிலேல்பீன் ஆகிய தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு பேராட்டத்தில் ஈடுப்பட்டனர்.