Breaking News

விக்னேஸ்வரனுக்கு எதிரான கோ­சம் எதனைச் சொல்லி நிற்கிறது!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை மீது தென்னிலங்கைப் பேரினவாதிகள் சிலர் சீற்றம் கொண்டு ஆங்காங்கே சிற்சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பேரினவாதிகளின் அரசியல் பிழைப்புக்கான முயற்சி என்பது தெரிந்த விடயமே.

இருந்தும் தமிழ் மக்களின் உரிமையைக் கேட்பதில்; தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் தங்களின் பண்பாட்டு விழுமியங்களுடன் வாழவேண்டும் என நினைப்பதில் தவறிருப்பதாக எவரும் கருத முடியாது.

இருந்தும் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கலாகாது என்பது போல நடந்து கொள்கின்றனர்.

இதற்கான காரணம் என்ன? என்பதற்கு அப்பால், பேரினவாதிகளின் எதிர்ப்பு தனித்து வடக்கின் முதலமைச்சருக்கு மட்டுமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுவது நியாயமானதே. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஏற்று தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் கூறிவருகின்றார்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கக்கூடிய விடயங்களை வடக்கின் முதலமைச்சர் கூறுகின்ற போது, தென்பகுதிப் பேரினவாதிகள் கோ­ம்போடு கின்றார்கள் எனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடியவர்கள் தாங்கள் முன்வைத்த விட யங்கள் தொடர்பில் இதுவரை அரசுடன் கதைக்கவில்லையா? அல்லது அந்த விடயங்களை எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லையா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே.

உண்மையில் தமிழ் மக்களின் உரிமைகள், அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கதைத்திருக்குமாயின் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் பேரினவாதிகள் குட்டிக்குட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தமாட்டார்கள் என்பது உண்மை.

எதுவாயினும் வடக்கின் முதலமைச்சருக்கு எதிராக தென்பகுதியில் இப்போது எழுந்துள்ள எதிர்ப்பு என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சர்வதேச ரீதியிலான மதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் முதலமைச்சர் மட்டுமே தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றார் என்ற உண்மையும் வெளிப்படுத் தப்படும்.

ஆக, தென்பகுதியில் பேரினவாதிகள் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறி நிற்கிறது. 

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிப்பாட்டுடன் எதனையும் பேசவில்லை. எனவே அவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற முதலமைச்சருக்கு பாதகம் செய்யும் வகையில் செயற்படக் கூடாது என்பதுமாகும்.

தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை கூட்டமைப்பைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் குறைகூறுவது பேரினவாதிகளைத் தூண்டுவதாகவே அமையும்.

அதுவே பேரினவாதிகள் இப்போது நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களின் அடிப்படை என்ற தகவலும் உறுதிப்படுத்தப்படுகிறது.