வடக்கு முதல்வரின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் சம்பந்தன்..!
கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “எழுக தமிழ் பேரணி” கொழும்பு அரசியலை ஒரு பதம் பார்த்துள்ளது என்றே கூற வேண்டும்.
இந்த பேரணியின் பின்னர் அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்கள் கூட அரசியல் இலாபம் பெறும் நோக்கில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த வண்ணமுள்ளனர்.
இந்த பேரணியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை ஒரு இனவாதியாகவும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களுக்காக வீதியில் இறங்கி போராடிய போது, தேசிய அரசாங்கம் குறித்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
எனினும், எழுக தமிழ் பேரணிக்கு எதிராக எந்த விதமான சட்டத்தையும் பிரயோகிக்காமல் அரசாங்கம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன எனவும் கேள்வியெழுப்பியது.
முதலமைச்சர் என்ற வகையில் வட மாகாணத்தில் எந்த விதமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் செய்யாமல் அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இவ்வாறான இனவாத செயற்பாடுகளை வடக்கு முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
எனவே, இதனை கூட்டு எதிர்க்கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. நாட்டின் துளிர்விடுகின்ற இனவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.