Breaking News

தமிழர் தாயகத்திற்காய் உயிர்நீத்த குமரப்பா-புலேந்திரன் நினைவுதினம் இன்றாகும்

தமிழர் பிரச்சினையில் இந்தியா துணைநிற்கும் என நம்பியிருந்த வேளையில், தமிழர் விடுதலையில் இந்தியா நம்ப முடியாத ஒரு சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான லெப்டிணன்ட் கேணல் குமரப்பா, லெப்டிணன்ட் கேணல் புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் உயிர்நீத்த நாள் இன்றாகும்.


கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி விடுதலைப் புலிகளின் ஆவணங்களுடன் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் ஆகியோர் இலங்கை படையினரின் ஆதரவோடு இந்திய படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை இராணுவ முகாமிற்கும் பின்னர் பலாலி இராணுவ முகாமிற்கும் கொண்டுசெல்லட்டு விசாரிக்கப்பட்டனர்.

விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த குறித்த காலப்பகுதியில், இவர்களுடைய கைதுக்கு முன்னர் அதே வருடம் ஜூலை மாதம் 29ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த 12 பேரையும் கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, இந்தியா தமக்கு ஒரு சிறந்த வழியை காட்டும் என இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், பலாலி இராணுவ முகாமில் வைத்து இதே நாளில் சடனைட் உட்கொண்டு பன்னிரண்டு போராளிகளும் தமது மக்களுக்காய் உயிர்நீத்தமை தமிழ் மக்கள் மனதில் ஆறாத வேதனையை ஏற்படுத்திய அதே சந்தர்ப்பத்தில், விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழவும் காரணமாக அமைந்தது.

12 போராளிகளும் உயிர்நீத்த பின்னரும் அவர்களுடைய உடலங்களின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தமையானது, விடுதலைப்புலிகள் மீது இராணுவம் எந்தளவு ஆத்திரம் கொண்டிருந்தன என்பதை காட்டியிருந்தது.

12 போராளிகள் விடயத்தில் இந்தியா செய்தது மன்னிக்கமுடியாத குற்றமாக பதியப்பட்டாலும், இவர்களது உயிர்த்தியாகமானது, இந்தியா போன்றதொரு வல்லரசை எதிர்த்து நிற்கும் வல்லமையை எம்மவருக்கு ஏற்படுத்தியது.

இவர்களின் நினைவாக வடமராட்சி தீருவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சதுக்கம் இராணுவத்தால் சிதைக்கப்பட்டுள்ளபோதும், மூன்று தசாப்தங்களாகியும் இவர்களது தியாகம் இன்னும் எம் மக்கள் மத்தியில் நீங்காமல் உள்ளது.