சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது "எழுக தமிழ்'' பேரணி இனவாதம்; எஸ்.பி. குற்றச்சாட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருக் கும் வரை அரசியல் தீர்வாக சமஷ்டியை ஒருபோதும் வழங்க மாட்டோம் எனத் தெரிவித்த சமூகநலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுயநலத்திற்காகவும் இனவாதத்திற்குமாகவே “எழுக தமிழ்” பேரணியையும் அதன் போதான உரையையும் நிகழ்த்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டமை பெருந்தவறு என்று குறிப்பிட்ட அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, அவரது இச்செயற்பாடானது ரணில் - மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் பாதிக்கச் செய்யும் விடயமாக உள்ளது என்றும் கூறினார்.
கொழும்பில் உள்ள சமூக நலன்புரி அமைச்சில் நேற்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருக்கும்வரை சமஷ்டி முறைமைக்கு இடமேயில்லை என்றும் அமைச்சர் சூளுரைத்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ் வரன் ஒருவர் இனவாதியல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு புரியுமாக இருந்தாலும் விக்னேஸ்வரன்தான் இந்த நாட்டை இரண்டாகப் பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றார்.
விக்னேஸ்வரனின் குரல் விடுதலைப் புலிகளுடையது. நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுக்கள், இனங்களுக்கு இடையிலான நட்புறவு முயற்சி என்பன இடம்பெறுகின்ற இத்தருணத்தில் வட க்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் பிழையானவை. அதில் சுயநலம், இனவாதம் விளம்பரத்திற்கான குறுகிய எண்ணம் காணப்பட்டன.
உச்சநீதிமன்ற நீதியரசராக அவர் இருந்திருந்தாலும் அரசியலில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருப்பதை இதனூடாக வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதே எனது கருத்தாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இருந்துகொண்டு இந்த நாட்டை பிளவடையச் செய்யவோ அல்லது, சமஷ்டி முறையை அமுல்படுத்தவோ இடமளிக்கப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறியிருந்தார்.
அத்துடன் பிரித்தானிய ஆட்சியின்போது மாகாணங்களின் ஆட்சிகள் அமைக்கப்பட்ட விதம், நோக்கம் என்பன தொடர்பிலும் ஜனாதிபதி விளங்கப்படுத்தியிருந்தார். எனினும் எமது நண்பர்கள் சிலர் விக்னேஸ்வரன் கூறுவதைப் போன்று இந்த நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பதாகவே தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் ஒற்றையாட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதுமில்லை நாட்டில் சமஷ்டி ஆட்சி முறையையும் அமு ல்படுத்தப்போவதும் இல்லை என்பதை மிகத் தெளிவாக இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.