வட கொரியா, அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயார்? செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்
வடகொரியா அடுத்த அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகள், செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளன.
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. முதன்முதலாக அந்த நாடு, 2006-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து 2009, 2013 ஆண்டுகளில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது. நான்காவதாக கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதித்தது.
ஐந்தாவது முறையாக கடந்த மாதம் 9-ந் தேதி மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இது முந்தைய அணுகுண்டு சோதனைகளை விட சக்தி வாய்ந்தது என கருதப்படுகிறது. இந்த சோதனை வெற்றி அடைந்தது குறித்து வடகொரியா கூறும்போது, “இந்த அணுகுண்டு சோதனை மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நடுத்தர ஏவுகணையில் அணுகுண்டை பொருத்தி செலுத்தும் திறனை அடைந்திருக்கிறோம்” என கூறி உலக அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் மறுபடியும் அந்த நாடு ஆறாவது முறையாகவும், இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகவும் அணுகுண்டு வெடித்து சோதிக்க தயாராகி வருவதற்கான அறிகுறிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அமெரிக்காவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள யு.எஸ்.-கொரியா இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வட கொரியாவில் செப்டம்பர் 9-ந் தேதி அணுகுண்டு வெடித்த புங்கியே-ரியில் ஒரு பெரிய வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள 3 சுரங்க வளாகத்திலும் ஆட்களும் வேலை செய்கிறார்கள். செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்துள்ளது.
என்ன நோக்கத்துக்காக அங்கே பணிகள் நடந்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதேநேரத்தில் தெற்கு தலைவாயிலில் நடக்கிற செயல்பாடுகளைப் பார்க்கிறபோது அது மற்றொரு அணுகுண்டு சோதனை செய்து பார்ப்பதற்கு உரியதாக இருக்கலாம் என யூகிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வடகொரியா முக்கிய தினங்களின்போது அணுகுண்டு வெடித்து சோதிப்பதை இப்போது வழக்கத்தில் கொண்டுள்ளது. கடந்த மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியது, அந்த நாடு உருவான தின கொண்டாட்டங்களின்போதுதான்.
இப்போது அங்கு ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவன நாள் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகொரியா எந்த நேரத்திலும் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே 5-வது முறையாக கடந்த மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக அந்த நாட்டின்மீது ஐ.நா.சபை மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் 6-வது முறையாக அந்த நாடு அணுகுண்டு சோதனை நடத்தினால் அதன் விளைவுகள் மோசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.