Breaking News

புதிய அரசியலமைப்பில் சமத்துவம் அவசியம்! - சம்பந்தன்

நாடு பிளவுபடாமல் அனைத்து இன மக்களும் சமத்துவமாக ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழக் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்.துரையப்பா விளையா ட்டரங்கில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஆட்சியை நடத்துபவர்களின் சிந்தனை மாற்றத்தை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது என நான் கருதுகின்றேன். இவை நடப்பதற்கு இந்த நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்படவேண்டும். வெவ்வேறு தேசிய இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை, சமரசம்,சமத்துவம் ஏற்பட வேண்டும். அவை ஊடாக சமாதானம் ஏற்பட வேண்டும். இதை இன்று ஆட்சியில் உள்ள தலைவர்கள் சிந்திக்கின்றனர்.

அதன் பயனாகதான் இந்த விளையாட்டு விழா, இதனை நடத்தியவர்களை நான் பாராட்டுகின்றேன். இந்த மேடையை அரசியல் மேடையாக நான் பயன்படுத்த விரும்பவில்லை. எனினும் ஒருசில கருத்துக்களை கூறவிரும்புகின்றேன். இவ்விதமான விளையாட்டு நிகழ்வுகளின் ஊடாக நாட்டு மக்களிடையே ஒற்றுமை சமாதானம் ஏற்பட வேண்டும்.

நாங்கள் ஒரு நாட்டை சேர்ந்தவர்களாக சமமாக வாழக்கூடிய நிலை ஏற்பட வேண்டும். அது உருவாகுவதற்கு சில கருமங்கள் உருவாக வேண்டும். நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கின்றது. இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது நாட்டில் வாழும் பெரும்பான்மை இன மக்கள் தான் சுதந்திரம் அடைந்தார்கள். ஏனைய சிறுபான்மை மக்கள் சுதந்திரம் அடையவில்லை என. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த நாட்டில் வாழும் சக இனங்களை சேர்ந்த மக்களால், சகல மக்கள் கட்சிகளால் ஒரு மித்து இந்த நாட்டில் அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை. 

எல்லா இன மக்களின் சமத்துவமும் அரசியல் சாசனத்திற்கு பெறப்படவில்லை. முதலாவது அரசியல் அமைப்பினை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினார்கள். அதன் பின்னர் வந்த அரசியல் சாசனங்கள் தனி ஒரு கட்சியினால் மாத்திரமே நிறைவேற்றப்பட்டது. 

தற்போது நாங்கள் புதிய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்குவதற்கு செயற்பட்டு வருகின்றோம். நாட்டின் பிரதான கட்சிகள் இன்று ஆட்சியில் உள்ளன. உருவாக்கப்படும் அரசியல் சாசனம் சமரசத்தின் அடிப்படை யில் நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ உரித்துடையவர்கள் என்ற அடிப் படையில், அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு ஒவ்வொரு இனத்தின் இறைமை மதிக்கப்பட்டு இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம். 

நாடு பிரிக்கப்படாமல் நாடு பிளவு படாமல் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக சமத்துவமாக அனைத்து மக்களும் வாழக்கூடிய ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் அதற்கு பெரும்பான்மையினத்தை சார்ந்தவர்கள் மாத்திரமல்ல, சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களும் ஆதரவு வழங்க வேண்டும். இது ஒரு முக்கியமான விடயம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் மூலமாக இந்த செய்தி அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும் என இரா.சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.