Breaking News

தமிழர்களின் காணிகளை மீள்வழங்குவதை எந்த இனவாதியும் தடுக்க முடியாது - ருவான் விஜயவர்தன

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் பின்னிற்கப்போவதில்லை. யார் இனவாதம் பேசினாலும் , புலிக்கதைகளை கூறினாலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்னிற்கப்போவதில்லை.  தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 


புலிகளுக்கு மீளவும் உயிர் கொடுக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும்  அவர்  குறிப்பிட்டார். 

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் செயலை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்  தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

விடுதலைப்புலிகளின்  பயங்கரவதத்தை பலப்படுத்தவோ அல்லது வடக்கில் மீண்டும் பயங்கரவாத சூழலை உருவாக்கி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவோ எமக்கு எந்த தேவையும் இல்லை. அரசாங்கமாக நாம் தேசிய பாதுகாப்பு விடயத்திலும் மக்களின் பாதுகாப்பிலும் மிகவும் கவனமாக  செயற்பட்டு வருகின்றோம். எனினும் வடக்கில் மேற்கொண்டுவரும் ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதமாக சித்தரிக்க ஒருசிலர் செயற்படுகின்றனர். பொது எதிரணியினர் என கூறிக்கொண்டு வடக்கில் நடப்பவற்றை இனவாதமாக  காட்ட வருகின்றனர். இராணுவ முகாம்களை அகற்றி மீண்டும் புலிகளுக்கு காணிகளை ஒப்படைத்து வருவதாக கூறுவவதையோ  அல்லது புலிகளை பலப்படுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதையோ  ஏற்றுக்கொள்ள முடியாத காரணிகளாகவே  நாம் கருதுகின்றோம். 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின், காணிகளை இழந்த தமிழ் மக்களின் நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களின் காணிகள் மீளவுயம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. ஆகவே வெகுவிரைவில் வடக்கில் காணிகளை  இழந்த தமிழ் மக்களுக்கு காணிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். யார் இனவாதம் பேசினாலும் , புலிக்கதைகளை கூறினாலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்னிற்கப்போவதில்லை.  தமிழ் மக்களின் காணிகளை மீளவும் அவர்களுக்கு வழங்குவதை எந்த இனவாதிகளினாலும், பிரிவினைவாதிகளினாலும் தடுக்க இயலாது. அதேபோல் புலிகளுக்கு நாட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தவும் முடியாது. வடக்கில் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொண்டு செயற்படும் அதே சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மிகவும் பலமாக நகர்கின்றோம்.  

  எமது இராணுவத்தை தண்டிக்கவும், அவர்களை பழிவாங்கவும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்பதையே பொது எதிரணியினர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து இதுவரையிலான காலப்பகுதியில் அவ்வாறான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

நாம் ஒரு சந்தர்ப்பதிலேனும் எமது இராணுவத்தை தண்டிக்க தயாராக இல்லை. தற்போது வரையிலும் எமது இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள், இராணுவ வீரர்களுக்கான அடையாள அட்டை மூலமாக சலுகைகளை வழங்கி வருகின்றோம். படிப்படியாக இராணுவ வீரர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றோம்  என்றார்.