பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென பலதரப்பட்டவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் யோசனைகளும் உள்வாங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
மேற்குலக நாடுகளில் அமுலிலுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் காணப்படும் தீவிரவாத ஒழிப்பு, இணையவழி குற்றங்கள், பொருளாதாரம் சார் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவற்றிற்கெதிரான சரத்துக்கள், இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பாதிக்கப்பட்ட சமூகத்திற்காகவும் நீதிக்காகவும் குரல்கொடுப்பவர்களை பாதிக்கும் வகையிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படும் சில முக்கிய சரத்துக்கள் புதிய சட்டத்திலும் உள்வாங்கப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.