வடக்கில் சிங்களவர்களை அச்சுறுத்தினால் தெற்கில் தமிழர்களை அச்சுறுத்துவோம்!
வடக்கில் சிங்கள மக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தாங்களும் அதே பாணியில் செல்ல நேரிடும் என்று மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை செய்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியின்போது வடக்கில் இரகசியமான முறையில் இடம்பெறுகின்ற பௌத்த கலாசார திணிப்புக்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல் கொடுத்திருந்தார்.
இது தொடர்பில் நேற்றைய ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட மேல்மாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணத்தை விடவும் தனது மாகாணத்திலேயே அதிகளவிலான தமிழ் மக்கள் வாழ்வதாகவும், வடக்கில் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தப்படும் நிலையே இங்கும் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டார்.
அரச கருமங்களில் வடமாகாண முதலமைச்சர் பல்வேறு சந்தர்ப்பத்தில் இனவாதத்தை கடைபிடித்திருப்பதாகவும் மேல்மாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.