ரவிராஜ் கொலை வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சட்டமா அதிபருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டு பிரிவினர் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்து சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், குறித்த வழங்கு எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.