முழுமையான அதிகாரப் பகிர்விற்கு பூரண பங்களிப்பு: கூட்டமைப்பிடம் சுவிஸ் உறுதி
அனைத்து இன மக்களும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பில் முழுமையான அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்வதற்கு பூரண பங்களிப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதியளித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சுவிட்சர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின்போதே சுவிட்சர்லாந்து தூதுக்குழுவினர் குறித்த உத்தரவாதத்தை வழங்கியிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஆட்சியாளர்களுடன் இணைந்து நாம் போராடி வருகின்றோம். இந்நிலையில், நேற்றைய சந்திப்பானது மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது.
இதன்போது, சுவிட்சர்லாந்து பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் முழுமையாக பகிரப்பட வேண்டுமாயின், நிதி கையாளுகை தொடர்பான அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அப்போதே பூரண அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என்று சுவிஸ் தூதுக்குழுவினர் எடுத்துரைத்தனர்.
அத்துடன், ஸ்விட்சர்லாந்தின் நம் நாட்டிற்கான மீள்கட்டுமான உதவிகள் தொடரும் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.