ஜிஎஸ்பி வரிச்சலுகை குறித்து பேச பிரசெல்ஸ் செல்கிறார் பிரதமர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியம் செல்லவுள்ளார்.
பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இது தொடர்பாக தாம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக வரும் சனிக்கிழமை பிரசெல்ஸ் செல்லவுள்ளதாக, கொழும்பில் நேற்று உலக ஏற்றுமதி அபிவிருத்தி அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவுக்கும் பங்களாதேசுக்கும் சம காலத்திலேயே இந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகை மனித உரிமை காரணங்களுக்காக 2010ஆம் ஆண்டு மீளப் பெறப்பட்டது.
எனினும் பங்களாதேஸ் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி தமது ஏற்றுமதியை அதிகரித்துள்ளது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.