ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மங்களவைச் சந்தித்தார்
பத்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக், பத்து நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.
நேற்று, அவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து, இன,மத சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அவர், முன்னர் போர் நடந்த பிரதேசங்களுக்கும் சென்று அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
வரும் ஒக்ரோபர் 20ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக், தனது பயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.