சர்ச்சைக்கு தீர்வு : ஜனாதிபதியும் பிரதமரும் மனம் விட்டு பேச்சு; ஐ.தே.க. அறிவிப்பு
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் காணப்பட்ட புரிந்துணர்வற்ற தன்மை முடிவுக்கு வந்து விட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவற்ற விடயங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர். தற்போது தேசிய அரசாங்கம் மேலும் பலமாகியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதியின் கூற்றினால் தேசிய அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஜனாதிபதியின் கூற்றினையடுத்து உடனடியாக ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு விட்டனர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் ஒரு சில இடங்களில் தவறான புரிந்துணர்வுகள் காணப்பட்டு வந்தன. அதாவது புரிந்துணர்வற்ற தன்மை காணப்பட்டது என்று கூறலாம். அவ்வாறான சூழலிலேயே ஜனாதிபதி இது போன்ற உரையினை நிகழ்த்தினார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் உரையின் பின்னர் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக அமர்ந்து இந்த புரிந்துணர்வற்ற நிலைமைகள் தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடினர். அதனூடாக இரண்டு தரப்புக்குமிடையில் காணப்பட்ட அனைத்து புரிந்துணர்வற்ற தன்மைக்கும் தீர்வு காணப்பட்டது.
அதவாது முன்பு இருந்ததை விட தேசிய அரசாங்கம் தற்போது மிகவும் பலமாக இருக்கின்றது. இரண்டு தரப்புக்குமிடையில் நிலவிவந்த அனைத்து புரிந்துணர்வற்ற தன்மைக்கும் தீர்வுகாணப்பட்டது. குறிப்பாக தேசிய அரசாங்கமானது முன்பு இருந்ததைவிட பலமாகிவிட்டது என்றே கூறலாம்.
ஜனாதிபதியின் கூற்றானது எக்காரணம் கொண்டும் தேசிய அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் அல்ல. அதனூடாக தேசிய அரசாங்கம் மேலுமு் வலுவடைந்துள்ளது.
கேள்வி- அப்படியாயின் தேசிய அரசாங்கத்துக்குள் புரிந்துணர்வற்ற தன்மை காணப்பட்டதா?
பதில் -ஆம். தேசிய அரசாங்கத்துக்குள் புரிந்துணர்வற்ற தன்மை காணப்பட்டதன் காரணமாகவே ஜனாதிபதி அவ்வாறான கருத்தை வெ ளியிட்டார். ஆனால் தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடத்தி அனைத்துக்கும் தீர்வு கண்டுவிட்டனர்.
கேள்வி - எதிர்வரும் நிலைமைகளை ஆராய இரண்டு கட்சிகளிலிருந்தும் குழு நியமிக்கப்பட்டுள்ளதா?
பதில்- அது எதிர்கால கொள்கைகளைமுன்னெடுக்க நிறுவப்பட்டுள்ளது.