2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு
தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க அவர்களோ கர்வம் தலைக் கேறிவிட இனப்பிரச்சினை தொடர்பில் தாமும் அரசும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தாத ஒரு நிலைமையே தற்போது காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் நான்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட அரசியல் அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டு என்பது வெறும் பெயரளவிலேயே உள்ளதைக் காண முடியும். விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டு தனித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு சில தலைவர்கள் மட்டுமே அதிகாரம் செலுத்துவ தென்ற அளவில் சர்வாதிகாரப் போக்கு கூட்டமைப்பை ஆட்டிப் படைக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போக்குடையவர்கள் கூட்டமைப்பை கைப்பற்றி வைத்திருப்பதன் காரணமாக அவர்களின் உறவு என்பது தமிழ் மக்களை முற்றாக ஓரம்கட்டி அரசுடன் நெருக்கமாகி விட்டது.
இத்தகைய போக்குகளால் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட கூட்டமைப்பின் அரசியல் தலைமைக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாமல் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை களும் குற்றம் இழைத்தவர்கள் என்ற பேரில் இடம் பெறும் கைதுகளும் தமக்குக் கவலை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரியின் மேற்கண்ட கருத்து அதிர்ச்சி அளிப்பதாக யாரேனும் கூறிக்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் அதிர்ச்சியைக் கொடுக்காது.
ஏனெனில் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப்போகின்றவர்கள் பதவியில்லாத வரைக்கும் தமிழ் மக்களுக்காகக் கதைப்பார்கள். அவர்களின் ஆதரவைக் கோரி நிற்பார்கள்.
பதவி பெற்றதும் - அதிகாரம் கைக்கு வந்ததும் இனம் இனத்தோடு என்பது போல அவர்களும் ஏனையவர்கள் போலவே நடந்து கொள்வர்.
இந்த அனுபவம் கூட்டமைப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு புரியாமல் இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு நன்கு புரியும்.
எனவேதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியைக் கொடுக்கமாட்டாது.
இருந்தும் மைத்திரியை நம்பி அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் இவரும் இப்படியாகிவிட்டார் என்று கவலை மட்டுமே கொள்ள முடியும்.
என்ன செய்வது! மிகப்பெரிய ஒரு போர் நடந்து அதில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்டு மிகப்பெரும் கொடூரம் நிகழ்ந்த பின்பும் சிங்கள ஆட்சிப்பீடம் மனம் மாறவில்லை எனும்போது நாம் என்ன செய்ய முடியும்? என்ற ஆதங்கம் ஏற்படுவது நியாயமே.
ஆயினும் எங்களுக்குக் கிடைத்த தமிழ் அரசியல் தலைமை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து தமிழ் இனத்துக்கு மிகப்பெரும் நாசகாரம் செய்யும் போது சிங்கள ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகள் தொடர்பில் நாம் கவலை கொள்வது அர்த்தமற்றதாகி விடுகின் றது.
இதற்கு மேலாக இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு எதிர்க் கருத்து கூறியுள்ளார்.
இதுதான் தமிழ் மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. என்ன அதிசயம்! தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுச்சிப் பேரணியை தடை செய்யவும், தடுத்து நிறுத்தவும் பாடுபட்டவர் இப்போது ஜனாதிபதியின் கருத்தை கண்டிக்கிறார் என்றால் அதன் பொருள் 2016 டிசம்பர் மாத இறுதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு சம்பந்தர் வழங்கிய வாக்குறுதி நடக்கப் போவதில்லை என்பதால், அதற்குப் பரிகாரம் தேடவே இப்படியயாரு இராஜதந்திரம் நடக்கிறது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வர்.