Breaking News

தமிழ், முஸ்லிம் மக்களை பிரிக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுப்பு:கிழக்கு முதல்வர்



தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எச்சரித்துள்ளார்.

பிரித்தாளும் தந்திரத்தால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் மோதல்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதால், இரு சமூகங்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சிறுபான்மை சமூகத்தினரான தமிழ் முஸ்லீம் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு எந்தவித இழுத்தடிப்புக்களும் இன்றி விரைவில் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், தற்போது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்துக்காக போராடும் நிலைகூட, அரசியல் ரீதியாக அவர்களது உரிமைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பதே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்கு யாப்பினூடாக அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவை அமுல்படுத்தப்படாமையே சொந்த மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அமைச்சர்களிடம் கெஞ்சிக் கேட்டு முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமை மாற்றப்பட்டு, சிறுபான்மை மக்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று சகல அதிகாரங்களும் பெற்று தலை நிமிரந்து வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.