Breaking News

துப்பாக்கி சூட்டு கலாச்சாரம் தலைதூக்க இடமளிக்க கூடாது ;யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்



யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாத சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மாணவர்கள் மத்தியில் அச்சமான சூழலை ஏற்பட்டுத்தியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மனிதாபிமானம் அற்ற முறையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்டமையினால் ஏனைய மாணவர்கள் கல்வி கற்ற முடியாத ஒரு அச்சமான சூழல் ஏற்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரஜீவன் தெரிவிக்கின்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களான அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் என்ற மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் என்ற மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் 20 ஆம் திகதி இரவு 11.30 அளவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியில் அச்சமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் கொலை தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் யாழ்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், துப்பாக்கி சூட்டு கலாச்சாரம் மீள தலைதூக்காது தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, மாணவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் யாழ்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் கலாநிதி சரவணபவன் கேட்டுக்கொண்டுள்ளார்.