இந்திய – இலங்கை உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது – நரேந்திர மோடி
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்தப் பிணைப்பு, இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே, இந்தியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நிலையான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு வரும் நொவம்பர் 5ஆம் நாள் புதுடெல்லியில் உயர்நிலைக் கூட்டம் ஒன்றைக் கூட்டவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், மீன்பிடித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று நடந்த சந்திப்பின் போது, பொருளாதாரம், பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, வர்த்தகம், மற்றும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கான மூலோபாயங்களை வகுத்துக் கொள்வது குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதன் மூலம் எவ்வாறு சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யலாம் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தீவிரவாதத்தை ஒழிப்பது மற்றும் சார்க் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விரிவாகப் பேசப்பட்டுள்ளது.