தில்ருக்ஷி இராஜினாமா : ஜனாதிபதியின் விமர்சனத்தின் எதிரொலி
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக் ஷி டயஸ் விக்கிரமசிங்க நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் நேற்று ஜனாதிபதிக்கு தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக் ஷி டயஸ் அனுப்பியுள்ள இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனதிபதி செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும், இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை டயஸ் வெளிப்படுத்தாத போதும், கடந்த வாரம் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலஞ்ச ஊழல்
ஆணைக் குழு மீது ஜனாதிபதி முன்வைத்த விமர்சனங்களே காரணம் என இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் உயர் மட்டத்தகவல்கள் கேசரிக்கு சுட்டிக்காட்டின.
'நான் எனது பதவியை இராஜினாமா செய்துள்ளேன். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். எனினும் அது குறித்து மேலதிக விடயங்களை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது' என ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க கேசரியிடம் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் ஆணைக் குழு மேலதிகமாக சி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. ஆகிய விசாரணை நிறுவனங்கள் மீது தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (எப்.சி.ஐ.டி.), இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு போன்ற நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தமது செய்ற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாயின் அந் நிறுவன்னக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க நேற்று பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தில்ருக்ஷி டயஸ் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இலங்கை சட்டக் கல்லூரியில் தனது சட்டப் படிப்புக்களை நிரைவு செய்து உயர் நீதிமன்ரில் சட்டத்தரணியாக சத்தியப் பிரபாணம் செய்துகொன்டிருந்தார். அதன் பின்னர் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டத்தை மொனாஸ் பல்கலைகக்ழகத்தில் வணிகத் துறையில் நிரைவுச் எய்துகொண்ட தில்ருக்ஷி டயஸ், இங்கிலாந்தின் வேல்ஸில் சொலிசிற்றர் படிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இணைந்துள்ள அவர், ஆரம்பத்தில் அங்கு குற்றவியல் துறையில் மேல் நீதிமன்றங்களில் அரச சட்டவாதியாக கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் சிவில் வழக்குகள் தொடர்பில் பொறுப்பாக செயற்பட்டுள்ள தில்ருக்ஷி டயஸ் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் வரை பல்வேறு பதவிகளை அங்கு வகித்துள்ளார்.
இதனைவிட தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பிஜி நாட்டின் மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டுள்ளதுடன் இலங்கை விமானப்படையின் தலைமை சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். இந் நிலையிலேயே கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஜனாதிபதியினால் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.