Breaking News

பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய பெண்ணை உடன் நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவு

மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற பெண்ணை உடனடியாக நாடுகடத்த கொழும்பு  மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார்.


மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் காவல்துறையினர், ஆலயம் ஒன்றின் கண்காணிப்பு காணொளிப் பதிவுகளை ஆராய்ந்து, குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர்.

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற 45 வயது மதிக்கத்தக்க மலர்விழி ஈஸ்வரன் என்ற இந்தப் பெண், சுன்னாகத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 33 சுவரொட்டிகள், மற்றும் பிரபாகரனின் ஒளிப்படம் பதிக்கப்பட்ட ஒருதொகை சாவிக் கோர்வைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இவர் தீவிரவாத தடுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போதே, அவரை உடனடியாக நாடுகடத்தும்படி நீதிவான் உத்தரவிட்டார்.